சென்னை :வங்கக்கடலில் வலுவிழந்து வரும் டிட்வா (Ditwah) புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் கனமழை தொடர்கிறது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2, 2025) முழு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் டி. ஜெயபார்கவன் தெரிவித்துள்ளார். டிட்வா புயல் வலுவிழந்தாலும், அதன் எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) எச்சரிக்கையின்படி, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இது கனமழை (64.5-115.5 மி.மீ.) பெய்யும் அபாயத்தைக் குறிக்கிறது.
டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 30 கி.மீ. தொலைவில் உள்ள நிலையில், மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திருவள்ளூரில் நாளை காலை முதல் மாலை வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. அதைப்போலவே, சென்னையிலும் இடை விடாமல் கனமழை பெய்து வருகிறது. நாளை அங்கும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் இதனால் போக்குவரத்து சிரமங்கள் ஏற்படலாம். எனவே, சென்னைக்கும், திருவள்ளூருக்கும் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
