சென்னை :வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள டிட்வா (Ditwah) புயல் தற்போது இலங்கையிலிருந்து தமிழ்நாடு நோக்கி மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, புயல் நாளை (நவம்பர் 30) அதிகாலை 3 முதல் 6 மணிக்குள் வட தமிழ்நாடு-புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 70-80 கி.மீ., சில இடங்களில் 90 கி.மீ. வரை பலமாக வீசக்கூடும்.
இதனால் தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமுதல் மிகக் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை அளவு 100-200 மி.மீ. வரை பதிவாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன: தூத்துக்குடி, பாம்பன், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 4-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு (பெரும் ஆபத்து) சென்னை துறைமுகத்தில் 2-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு (ஆபத்து இருக்கிறது)மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மற்றும் நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி, 29-11-2025: வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
30-11-2025: வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.ஏனைய வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
