பெரம்பலூர் :அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற கருப்பொருளுடன் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்யும் நோக்கில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும், கூட்டணிக் கட்சி தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களிடம் அவர் எழுச்சியுடன் உரையாற்றினார். இன்று உங்களுடன் ஸ்டாலின் என திட்டம் கொண்டுவருபவர், இத்தனை நாட்கள் எங்கிருந்தார்? ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பெட்டிகளில் மனுக்களை பெற்று ஆட்சிக்கு வந்ததும் தீர்வு காண்பேன் என்றார்.
அப்ப எதுக்கு இது? மக்களை ஏமாற்றும் முதல்வர் இவர். சட்டசபை தேர்தலில் பெண்களின் வாக்குகளை பெறவே மகளிர் உரிமைத் தொகை பெறும் விதிகளை ஸ்டாலின் தளர்த்தி உள்ளார். அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
குன்னம் தொகுதியில் கூடிய மக்கள் கூட்டம் ஒரே குரலில் ByeByeStalin என சொல்கிறார்கள். 2026-இல் அமையப்போவது, மன்னராட்சி அல்ல, மக்களின் ஆட்சி, அதிமுகவின் ஆட்சி. திமுக 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என கனவு காணலாம். ஆனால், அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி 210 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும்.
நான் பாஜக அடிமையாம், அதிமுகவை பாஜக விழுங்கிவிடுமாம். அதிமுகவை உடைக்க எத்தனையோ அவதாரங்கள் எடுத்தீர்கள் ஸ்டாலின் அவர்களே. துரோகிகளை வைத்து அதிமுகவை உடைக்க நினைத்தீர்கள். சட்டமன்றத்தில் முயன்றும் நடக்காததால், சட்டையை கிழித்துக்கொண்டு போனீர்கள்” என்று விமர்சித்தார்.
முன்னதாக, அமித்ஷா வீட்டு கதவை தட்டுவதாக இபிஎஸ்ஸை ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள இபிஎஸ், இதில் என்ன தவறு? அவர் உள்துறை அமைச்சர். நீங்கள் செய்ய மாட்டேன் என்கிறீர்கள். செய்பவர்களையும் விட மறுக்கின்றீர்கள் என்றார். மேலும், செய்பவர்கள் கதவை தட்டினால் தான், மக்களின் பிரச்னை தீரும். நாங்கள் தட்டியதால் தான் 100 நாள் வேலை திட்டப் பணம் கிடைத்தது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நிறைவேறியது” என்றார்.
