சென்னை :ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார். அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 2030-க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தும் நோக்கில், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்ட அரசு முறை சுற்றுப்பயணம், மாபெரும் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது.
இந்தப் பயணம் தமிழகத்தின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மிக முக்கியமான முயற்சியாக அமைந்துள்ளது. ஆம், இந்த ஒரு வார கால பயணத்தில், தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 17,613 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணம் மாபெரும் வெற்றியையும் மனநிறைவையும் தந்தது. இந்தப் பயணத்தைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தம்பி டிஆர்பி ராஜாவுக்கும், தொழிற்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்.
இந்தப் பயணங்கள் தொடரும், வரும் 11-ஆம் நாள் ஓசூரில் அடுத்த முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது என தெரிவித்தார். ஜெர்மனி, மொத்தம் ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”’வெளிநாட்டு பயணத்தின் வெற்றியை அடுத்து, வருகிற செப்.11ஆம் தேதி ஓசூரில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, ஆட்டோமேட்டட் லேன் மற்றும் பணியாளர் தங்குமிடம் ஆகியவற்றை திறந்து வைத்து, ரூ.1,100 கோடி மதிப்பிலான தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறேன்” என்றார்.
