"குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த மோடி"...ராகுல் காந்தி காட்டம்!

வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததை உறுதிப்படுத்த, தேர்தல் ஆணையம் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்று ராகுல்காந்தி மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார்.

Rahul Gandhi narendra modi

புதுடெல்லி:மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் மோசடி நடந்ததாக இன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதில் முக்கிய குற்றச்சாட்டாக “பிரதமர் நரேந்திர மோடி மிகக் குறைந்த பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளார். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல.சிசிடிவி காட்சிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் இந்த குற்றங்களுக்கு சாட்சியாக உள்ளன.

இந்திய அரசியலமைப்புக்கு எதிராக மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது,” என்று அவர் காட்டமாக குற்றம் சாட்டினார். நாடு முழுவதும் இதேபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். மகாராஷ்டிர தேர்தலில் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து பேசிய ராகுல் காந்தி, “வாக்குப்பதிவு முடியும் கடைசி நேரத்தில் எந்த வாக்குச் சாவடிகளிலும் அதிக கூட்டம் இல்லை. ஆனால், இறுதியில் அதிக வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

வாக்குச் சாவடிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை கேட்டபோது, ஆணையம் அவற்றை வழங்க மறுத்துவிட்டது,” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த மறுப்பு, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரமாக இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மையின்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகள், பாஜக-வுக்கு சாதகமாக முடிவுகள் அமைந்ததற்கு பின்னால் மோசடி இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சந்தேகத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விரிவாக பேசிய ராகுல், “மகாராஷ்டிராவில், கடந்த 5 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை விட, 2024 தேர்தலுக்கு முந்தைய 5 மாதங்களில் அதிக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். நாடாளுமன்ற தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையே சுமார் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், வாக்காளர் பட்டியலை கேட்டபோது, தேர்தல் ஆணையம் அதை வழங்க மறுத்துவிட்டது,” என்று கூறினார்.

இந்த புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட விதம், மகாராஷ்டிரா மக்கள் தொகையுடன் ஒத்துப்போகவில்லை என்றும், இது மோசடிக்கு வலுவான ஆதாரமாக இருப்பதாகவும் அவர் வாதிட்டார். வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததை உறுதிப்படுத்த, தேர்தல் ஆணையம் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக ராகுல் காந்தி எச்சரித்தார். “இந்த மோசடி, இந்திய அரசியலமைப்பையும், மக்களின் வாக்குரிமையையும் கேலி செய்யும் செயல். தேர்தல் ஆணையம் பாஜக-வுடன் கூட்டு சேர்ந்து, வாக்காளர் பட்டியலில் மோசடி செய்து, வாக்கு எண்ணிக்கையை உயர்த்தி, ஆதாரங்களை மறைத்துள்ளது,” என்று அவர் குற்றம்சாட்டினார்.