உதயநிதி மீது 6 பிரிவுகளில் வழக்கு...கைது செய்ய வீட்டிற்கே சென்ற காவல்துறை!

முதல்வர் விஜய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்தும் பெண்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆர்ப்பாட்டத்தில், வேளாண்மைத் துறை அமைச்சர் பட்ஜெட் நகலை எடுத்துக் கொண்டு திருப்பதிக்குச் செல்வதாகவும், மொத்த அமைச்சரவையும் 'ஜோக்கர்' கூட்டமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்ததுடன், மேட்டூர் அணை திறக்கப்படாதது பற்றிய கவலை முதலமைச்சருக்கு இல்லை என்றும் குற்றம்சாட்டினார். இதற்கிடையில், அங்கிருந்தவர்கள் நடிகை ஒருவரின் பெயரைக் கூற, அதற்கு உதயநிதி இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாகப் பதிலளித்துப் பேசியதாகக் கூறப்படும் இவரது இந்த மேடைப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, பெண்கள் பற்றி அவதூறாகப் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மகளிரணித் தலைவர் பைரவி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூரில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசாரும் நீலாங்கரை இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அங்கு குவிக்கப்பட்டிருந்த காவலர்களிடம் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வழக்கறிஞர் வரும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, உதயநிதியை உடனடியாகக் கைது செய்யக் கோரி இணை ஆணையர் விஜயகுமாரிடம் கிருத்திகாவும் மா.சுப்பிரமணியனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, "ஒரு 10 நிமிஷம் மட்டும் டைம் கொடுங்க, காலைக்கடனை முடிக்காமல் உதயநிதியால் எப்படி வர முடியும்?" என்று மா.சுப்பிரமணியன் தரப்பில் கூறப்பட்டதற்கு, "10 நிமிஷம் 10 நிமிஷம்னு எவ்ளோ நேரம் சொல்லுவீங்க, உடனே வந்து அவர கைதாவ சொல்லுங்க" என்று இணை ஆணையரிடம் அவர்கள் வாதாடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கிடையில், சட்டமன்றப் பணிகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கிலேயே உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ய முயற்சிகள் நடப்பதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இன்று பிற்பகலிலேயே இதன் மீதான விசாரணையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.