மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெற்றது. மாநாட்டு மேடையில் 35 நிமிடங்கள் உரையாற்றினார். தவெக தலைவர் விஜய் மாலை 4.50 மணிக்கு உரையை தொடங்கிய விஜய் 5.25 மணிக்கு முடித்தார்.
மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், ”நான் இப்போது அரசியலுக்கு வர நன்றிக்கடன் தான் காரணம். 30 ஆண்டுகளா என்னை தாங்கி பிடிச்சு, அன்பையும், ஆதரவையும் கொடுத்துட்டு வர்றீங்க. நீங்க எனக்கு கடவுள் கொடுத்த வரம். என் கூட நிற்குற மக்களை, நான் எப்படி மறப்பேன்? இதை பார்க்கும்போது எதிரிகளுக்கு எரியுது.
அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். ஷூட்டிங்கில் வந்து ஆட்சியை பிடிக்க முடியாது என்றனர், அதற்கு பலரை எடுத்துக்காட்டாகவும் கூறினர். அதேபோல விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாகாது என்றனர். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும்தான் இருக்கிறார் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள்.
இந்தக் கூட்டம் வெறும் ஓட்டாக மட்டும் இல்லாமல் வரப்போகும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா இருக்கப்போகிறது. இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது, இந்த கூட்டம் ஓட்டாக மட்டுமல்ல… மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் இருக்கும்.
தவெக கையில் எடுத்துள்ள அரசியல், உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்ல அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல். 234 தொகுதியிலும் நான் தான் போட்டியிடப்போறேன். உங்க வீட்ல இருக்குற ஒருத்தர் தான் வேட்பாளரா நிற்கப்போகிறார். அந்த வேட்பாளரும், நானும் வேறு வேறு இல்லை. அவருக்கு ஓட்டு போட்டா, எனக்கு ஓட்டு போட்ட மாதிரி. தூத்துக்குடி ஸ்னோலினின் அம்மா என்னை தன் தம்பி என்றார்.
