சென்னை :நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) நேரடியாக விமர்சித்து, “புலி வேட்டைக்கு குறுக்கே அணில் குஞ்சுகள்” எனக் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெகவின் கொள்கை என்னவென்று கேட்டால் ‘தளபதி’ என கோஷமிடுவதாக சீமான் சாடியுள்ளார். நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “அவங்ககிட்ட ‘என்னடா உங்க கொள்கை’னு கேட்டா, ‘தளபதி… தளபதி’னு சொல்றாங்க, எனக்கு ‘தலைவிதி… தலைவிதி’னு கேக்குது.
‘சரி எதுக்குடா வந்தீங்க’னு கேட்டா, ‘TVK, TVK’னு கத்துறாங்க, எனக்கு ‘டீ விற்க, டீ விற்க’னு கேக்குது. புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள். அணிலே ஓரமா போய் விளையாடு, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை என்றும் விமர்சித்தார்.
ஆரம்பத்தில் தம்பி என விஜய்யை அழைத்து வந்த அவர், தவெக முதல் மாநாட்டுக்குப் பிறகு கடுமையாக விமர்சித்து வருகிறார். இது இரு கட்சிகளின் ஆதரவாளர்களிடையே சமூக ஊடகங்களில் மோதல்களை தூண்டியுள்ளது.
