தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள்... திருத்திக் கொள்கிறோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஸ்பீச்!

அதிகாரத்தைக் கேள்வி கேட்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்றும், தவெக வெற்றிக்கு ஊடகங்களும் முக்கிய காரணமாக இருந்தன என்றும் தெரிவித்தார்.

Hero Image

சென்னை: பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, வெற்றி பெற்ற வீரர்களுக்குக் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.

அதன்பிறகு பேசிய அவர் " அதிகாரத்தைக் கேள்வி கேட்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. எனவே, தவறுகளை எப்போது வேண்டுமானாலும் சுட்டிக்காட்டுங்கள், நாங்கள் திருத்திக் கொள்கிறோம். தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெறுவதற்கு ஊடகங்களும், செய்தியாளர்களும் மிக முக்கியக் காரணமாக இருந்தனர்" என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய இளைஞர்களிடையே கவலைக்குரிய வகையில் அதிகரித்து வரும் போதைப்பழக்கத்தைத் தடுப்பதற்கு விளையாட்டே சிறந்த தீர்வாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். விளையாட்டு மனிதர்களுக்கு மனவலிமையையும், குழு மனப்பான்மையையும் (Team spirit) வளர்க்கிறது என்றார்.

தான் ஒரு விளையாட்டு வீரர் (Sportsman) என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், நேரு ஸ்டேடியத்தில் தான் வளர்ந்த கதையையும், எஸ்டிஏடி (SDAT) மாணவனாக இருந்த நினைவுகளையும் நினைவு கூர்ந்தார். கடந்த 20 ஆண்டுகளாகத் தினமும் காலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் தான் இயங்கி வருவதாகக் கூறிய அவர், எந்தவொரு கடினமான பிரச்சினையையும் மனவலிமையோடு எதிர்கொள்ளும் பக்குவத்தைத் விளையாட்டுதான் தனக்குக் கற்றுக்கொடுத்தது என்றார்.

கல்வியும் விளையாட்டும் நாட்டின் இரு கண்களாகச் சமமாகக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதைத் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், தமிழகத்தில் இளைஞர்களின் மக்கள் தொகை 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இளைஞர்களிடையே அதிகரித்துள்ள கவலை (Anxiety) மற்றும் மன அழுத்தம் (Stress) காரணமாகவே அவர்கள் மது மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதாகக் குறிப்பிட்ட அவர், விளையாட்டின் மூலம் மட்டுமே இத்தகைய அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும் என்றார்.

எஸ்டிஏடி (SDAT) சார்பில் ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளுக்கு மட்டும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமல், நீதிபதிகள் (Judges), சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs), அமைச்சர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் இணைத்து மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்றார்.