ஒரே சார்ஜில் 200 கி.மீ! ஏதர் கொனார்க் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 29-ல் களம் இறங்குகிறது!

ஏதர் கொனார்க் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 6 வேரியண்ட்டுகள், 200 கி.மீ ரேஞ்ச், 900W பாஸ்ட் சார்ஜிங் & ஏர்வாக் வசதியுடன் ஆகஸ்ட் 29-ல் அறிமுகம்! முழு விவரங்கள் இதோ.

Hero Image

பெங்களூரு, ஆகஸ்ட் 16: இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy), குடும்பப் பயன்பாட்டிற்கான தனது புதிய 'ஏதர் கொனார்க்' (Ather Konarc) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறும் 'ஏதர் கம்யூனிட்டி டே' நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையில், இஸ்கூட்டரின் வேரியண்ட்டுகள், பேட்டரி மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகள் குறித்த பிரத்யேகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 புதிய வேரியண்ட்டுகள் & 'பெட்ராக்' பேட்டரி

ஏதர் கொனார்க் மாடல் முற்றிலும் புதிய 'EL பிளாட்ஃபார்ம்' கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்கூட்டர் மொத்தம் 6 வேரியண்ட்டுகளில் (4 'S' வரிசை வேரியண்ட்டுகள்: SR1, SR2, SR3, SR4 மற்றும் 2 'Q' வரிசை வேரியண்ட்டுகள்: QR2, QR3) விற்பனைக்கு வரவுள்ளது. இதில் புதிய 'பெட்ராக்' (Bedrock) பேட்டரி தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப ஒற்றை சார்ஜில் 100 கி.மீ, 125 கி.மீ, 160 கி.மீ மற்றும் 200 கி.மீ (IDC Range) வரை பயணிக்கும் 4 விதமான ரேஞ்ச் தேர்வுகளில் இஸ்கூட்டர் கிடைக்கவுள்ளது.

900W பாஸ்ட் சார்ஜிங் - 2 மணி நேரத்தில் 80% சார்ஜ்

சார்ஜிங் வசதியைப் பொறுத்தவரை, இஸ்கூட்டரிலேயே இன்-பில்ட் 450W ஆன்போர்டு சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் வசதியாக மற்றொரு 450W சார்ஜரை இணைப்பதன் மூலம் மொத்தம் 900W பாஸ்ட் சார்ஜிங் (900W Fast Charging) திறனைப் பெற முடியும். இதன் மூலம் வெறும் 2 மணி நேரத்தில் 0 முதல் 80% வரை பேட்டரியை அதிவேகமாக சார்ஜ் செய்ய முடியும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

சத்தமில்லாத மோட்டார் & 'ஏர்வாக்' வசதி

முந்தைய ஏதர் மாடல்களில் இருந்த மோட்டார் சத்தம் (Motor Whine) முற்றிலும் தவிர்க்கப்பட்டு, இ புதிய டிரைவ்ட்ரெயின் சத்தமே இல்லாமல் (Silent Drivetrain) மிகவும் அமைதியாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்கூட்டரைத் தள்ளிச் செல்லும்போது சிரமத்தைக் குறைப்பதற்காக மோட்டார் உதவியுடன் இயங்கும் 'ஏர்வாக்' (Airwalk Assist) என்ற புதிய தொழில்நுட்ப வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன் & சீட் வசதி

குடும்பத்தினர் சௌகரியமாகப் பயணிக்கும் வகையில் நீண்ட இருக்கை, அகலமான ஃபுட்போர்டு மற்றும் பலமான எஃகு (Steel Unibody) கட்டமைப்புடன் இஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கரடுமுரடான இந்தியச் சாலைகளிலும் சொகுசான பயணத்தை வழங்க முன்புறத்தில் பெரிய 14 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 12 அங்குல சக்கரமும் கொடுக்கப்பட்டுள்ளன. இஸ்கூட்டரின் சர்வீஸ் இடைவெளி 1 ஆண்டு அல்லது 10,000 கி.மீ என்பதால் பராமரிப்புச் செலவும் மிகவும் குறைவாகவே இருக்கும்.

7 அங்குல தொடுதிரை & விலை விவரம்

7 அங்குல டிஎஃப்டி தொடுதிரை (7-inch TFT Touchscreen Display), ஸ்மார்ட்போன் இணைப்பு, கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் போன்ற அம்சங்களுடன் ரூ.1.00 லட்சம் முதல் ரூ.1.25 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் களம் இறங்கும் இஸ்கூட்டர், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஓலா எஸ்1 மாடல்களுக்குக் கடும் போட்டியாக அமையும்.

ஒரே சார்ஜில் 200 கி.மீ! ஏதர் கொனார்க் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 29-ல் களம் இறங்குகிறது!