மதுரை :மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் கலந்து கொண்ட த.வெ.க தலைவர் விஜய், ”திமுக, பாஜகவை விமர்சனம் செய்தும் விஜயகாந்த் மற்றும் எம்ஜிஆர் குறித்தும் பல விஷயங்களை பேசினார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ”நான் இப்போது அரசியலுக்கு வர நன்றிக்கடன் தான் காரணம். 30 ஆண்டுகளா என்னை தாங்கி பிடிச்சு, அன்பையும், ஆதரவையும் கொடுத்துட்டு வர்றீங்க. நீங்க எனக்கு கடவுள் கொடுத்த வரம். என் கூட நிற்குற மக்களை, நான் எப்படி மறப்பேன்? இதை பார்க்கும்போது எதிரிகளுக்கு எரியுது.
இன்று எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக் காப்பது யார்? அந்த கட்சி எப்படி இருக்கு? அதை நினைத்து அந்தக் கட்சி தொண்டர்கள் நொந்துபோய் இருக்காங்க. வெளிய சொல்ல முடியாம இருக்காங்க. பாஜகவோட கூட்டணி வைத்திருப்பதால, ஆட்சிக்கு வந்துவிட முடியாது.
எம்.ஜி.ஆர் யார் தெரியும்ல? அவர் மாஸ் என்னன்னு தெரியும்ல? அவர் உயிரோட இருந்தவரை, முதல்வர் சீட்டை யாராலயும் அடைய முடியல. எப்படியாவது முதல்வர் சீட்டை எனக்கு கொடுங்க, என் நண்பர் வந்ததும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்னு கெஞ்ச வைத்தவர் எம்.ஜி.ஆர்.
சும்மா சினிமாக்காரன், சினிமாக்காரன்னு சொல்றீங்க. அம்பேத்கரை, காமராஜரை, நல்லக்கண்ணு ஆகியோரை தோற்கடித்தது சினிமாக்காரன் அல்ல, அரசியல்வாதிதான். அதனால, எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் கிடையாது, எல்லா சினிமாக்காரனும் முட்டாளும் கிடையாது” என்று காட்டமாக கூறினார்.
