மகா கும்பமேளா கூட்ட நெரிசல் : அரைகுறை ஏற்பாடுகளே காரணம்! கொந்தளித்த காங்கிரஸ்!
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்த சம்பவத்திற்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம் என காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
அலகாபாத் : உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பலரும் இரங்கலை தெரிவித்தும் மற்றோரு பக்கம் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த சம்பவம் குறித்து பேசுகையில் ” மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. VIPகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல், நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துதல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, மத்திய மற்றும் மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், பல கோடி ரூபாய் செலவிட்டும், இவ்வளவு மோசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தனது கண்டனத்தை தெரிவித்தார்.
மேலும், அரசுகள் உடனடியாக பக்தர்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, மற்றுமொரு அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதேபோல ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இரங்கலை தெரிவித்தார்.
அதில் ” பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததுள்ளனர் மற்றும் பலர் காயம் அடைந்துள்ளனர். இந்தச்செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
தவறான நிர்வாகம் மற்றும் பொது பக்தர்களுக்கு பதிலாக அதிகளவிலான விஐபிக்கள் மீது நிர்வாகத்தின் சிறப்பு கவனம் செலுத்தியது ஆகியவை இந்த துயர சம்பவத்திற்கு காரணம். மகா கும்பமேளாவிற்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. இன்னும் பல விழாக்கள் நடைபெற உள்ளன. இன்று போன்ற சோகமான சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் அரசு பாதுகாப்பு வசதியை மேம்படுத்த வேண்டும்.
விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பொது பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு சிறந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.