R15-ஐ தூக்கி சாப்பிடும் Yamaha R2! இளைஞர்கள் எந்த பைக் வாங்கலாம்?

Yamaha R2 மற்றும் Yamaha R15 V4 பைக்குகளின் வித்தியாசங்கள் என்னென்ன நீங்கள் எந்த பைக் வாங்கலாம் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Hero Image

டெல்லி : இந்தியாவில் உள்ள பைக் பிரியர்கள், குறிப்பாக கல்லூரி இளைஞர்கள் மத்தியில் யமஹா நிறுவனத்தின் ஆர்-சீரிஸ் (R-Series) பைக்குகளுக்கு எப்போதும் ஒரு தனி மிரட்டலான வரவேற்பு உண்டு. நீண்ட காலமாக 150சிசி பிரிவில் கொடிகட்டிப் பறக்கும் ஆர்15 வி4 (R15 V4) பைக்கிற்கு மேல், ஒரு பவர்ஃபுல் ஆப்ஷனைத் தேடும் வாடிக்கையாளர்களுக்காக யமஹா நிறுவனம் இன்று புதிய யமஹா ஆர்2 (Yamaha R2) பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

முழுமையான ரேசிங் வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் வந்துள்ள இந்த புதிய யமஹா ஆர்2 பைக்கிற்கும், ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் ஆர்15 வி4 பைக்கிற்கும் என்னென்ன வித்தியாசங்கள் உள்ளன, இன்ஜின் வேகம் மற்றும் விலை விவரங்கள் எப்படி மாறுபடுகின்றன என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் .

வடிவமைப்பு மற்றும் லுக்கில் உள்ள வித்தியாசங்கள்

புதிய யமஹா ஆர்2 பைக், ஆர்-சீரிஸின் பாரம்பரிய வடிவத்தைப் பின்பற்றினாலும், இது ஒரு பெரிய பைக்கிற்கான கம்பீரமான உடல் அமைப்பைக் (Larger Bodywork) கொண்டுள்ளது. இதன் கூர்மையான ஏரோடைனமிக் பேனல்கள் மற்றும் முழுமையான ஃபேரிங் வடிவமைப்பு, இந்த பைக்கை ஆர்15 மாடலை விட மிகவும் பிரம்மாண்டமாகக் காட்டுகிறது. ரேசிங் ட்ராக்குகளில் வண்டியை அதிவேகமாகச் செலுத்துவதற்கும், வளைவுகளில் கச்சிதமாகத் திருப்புவதற்கும் ஏற்றவாறு இதன் ஒட்டுமொத்த எடையும் 149 கிலோவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Yamaha YZF R2 vs R15 V4 NEWS.webp

மறுபுறம், யமஹா ஆர்15 வி4 பைக் சற்றே கச்சிதமான, மெலிதான உடல் அமைப்பைக் (Compact Footprint) கொண்டுள்ளது. இதன் நீளம் 1,990 மி.மீ, அகலம் 725 மி.மீ மற்றும் வீல்பேஸ் 1,325 மி.மீ ஆக இருப்பதால், நெரிசலான நகர டிராஃபிக் சாலைகளிலும், குறுகிய சந்துகளிலும் வண்டியை வளைத்து ஓட்டுவது மிகவும் எளிதாக இருக்கும். மேலும் இதன் எடை ஆர்2 பைக்கை விட 8 கிலோ குறைவாக, வெறும் 141 கிலோ மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஜின்

இந்த இரண்டு பைக்குகளுக்கும் இடையே இருக்கும் மிக முக்கியமான மாற்றமே அவற்றின் இன்ஜின் செயல்திறன் தான். புதிய யமஹா ஆர்2 பைக்கில் சக்திவாய்ந்த 204cc லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10,000 rpm-ல் 26.2 bhp பவரையும் மற்றும் 8,000 rpm-ல் 19.3 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் அசுர திறன் கொண்டது. இந்த இன்ஜினில் அதிக வேகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஓட்டுதல் உணர்விற்காக டிஓஹெச்சி (DOHC) தொழில்நுட்பமும், டிஎல்சி கோட்டிங் செய்யப்பட்ட வால்வுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

yamaha yzf r2 vs r15 v4 engine.webp

இதற்கு நேர்மாறாக, யமஹா ஆர்15 வி4 பைக்கில் சிறிய 155cc லிக்விட்-கூல்டு, எஸ்ஓஹெச்சி (SOHC) இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 10,000 rpm-ல் 18.1 bhp பவரையும் மற்றும் 7,500 rpm-ல் 14.2 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஆர்2 பைக்கில் இல்லாத, யமஹாவின் புகழ்பெற்ற விவிஏ (VVA) தொழில்நுட்பம் இந்த ஆர்15 பைக்கில் உள்ளது. இது குறைந்த வேகத்திலும், அதிக வேகத்திலும் இன்ஜின் ஆற்றல் குறையாமல் சீராகச் செல்ல உதவுகிறது.

நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ரைடிங் மோடுகள்

தொழில்நுட்ப வசதிகளைப் பொறுத்தவரை, புதிய யமஹா ஆர்2 பைக் ஆர்15 மாடலை விட அடுத்த கட்ட பிரீமியம் வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் 5-இன்ச் முழு டிஎஃப்டி (TFT) டிஸ்ப்ளே, ரைடு-பை-வயர் த்ராட்டில், டிராக்‌ஷன் கன்ட்ரோல், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் போன்ற அணைத்து வசதிகளும் அடிப்படை வேரியண்ட்டிலேயே ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், இதன் நடுத்தர வேரியண்ட்டில் கிளட்ச் இல்லாமல் கியர் மாற்ற உதவும் பை-டைரக்ஷனல் குயிக் ஷிப்டர் வசதியும், இதன் டாப் மாடலான ஆர்2 எம் (R2 M) வேரியண்ட்டில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரேக் லீவர்கள், சாவி இல்லாத கீலெஸ் சிஸ்டம் போன்ற பல அதிநவீன சொகுசு வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

Yamaha YZF R2 vs R15 V4 modes.webp

அதே நேரத்தில், யமஹா ஆர்15 வி4 பைக்கும் தன் பங்கிற்கு டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஒய்-கனெக்ட் ஸ்மார்ட்போன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஸ்ட்ரீட் மற்றும் ட்ராக் என இரண்டு ரைடிங் மோடுகள் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இதன் குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் மட்டும் கியரை வேகமாக மாற்ற உதவும் அப்ஷிப்ட் குயிக் ஷிப்டர் வசதி தனியாகக் கிடைக்கிறது.

மைலேஜ் விவரங்கள்

புதிய யமஹா ஆர்2 பைக்கில் பெரிய 204cc லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 26.2 bhp என்ற அசுர பவரை வெளிப்படுத்துவதால், சிறிய பைக்குகளை விட இதற்கு சற்றே கூடுதல் எரிபொருள் தேவைப்படும். இருப்பினும், யமஹா நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த இன்ஜின் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் காரணமாக, இந்த 200சிசி ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் இது ஒரு மிகச் சிறந்த மைலேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண நகரப் போக்குவரத்தில் (City Traffic) இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 30 முதல் 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கும். இதுவே நீங்கள் நெடுஞ்சாலைகளில் (Highways) சீரான வேகத்தில் (Cruising Speed) செல்லும்போது, இதன் மைலேஜ் திறன் அதிகரித்து ஒரு லிட்டருக்கு சுமார் 35 கிலோமீட்டர் வரை மிகச் சிறந்த பெட்ரோல் சிக்கனத்தை வழங்கும். 26 குதிரைத்திறன் கொண்ட ஒரு பக்கா ரேசிங் பைக்கிற்கு இந்த 32-35 கி.மீ மைலேஜ் என்பது மிகவும் தாராளமான அளவீடாகும்.

yamaha yzf r2 vs r15 v4 mileage-1.webp

மறுபுறம் , யமஹா ஆர்15 வி4 பைக் சாதாரண சிட்டி டிராஃபிக் சாலைகளிலேயே மிக எளிதாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 40 முதல் 45 கிலோமீட்டர் வரை அசாத்திய மைலேஜை வாரி வழங்குகிறது. நீங்கள் நெடுஞ்சாலைகளில் லாங் ரைடு செல்லும்போது, தேவையில்லாமல் வண்டியை அதிரடியாக முடுக்காமல் சீராக ஓட்டினால், ஒரு லிட்டருக்கு 48 கி.மீ வரை கூட மைலேஜ் பெற முடியும். 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் இந்த அளவிலான மைலேஜ் என்பது ஒரு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும்.

விலை விவரங்கள்

விலையைப் பொறுத்தவரை, புதிய மற்றும் அதிக பவர்ஃபுல் இன்ஜின் கொண்ட யமஹா ஆர்2 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை 2.30 லட்சம் ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் மூன்று வேரியண்ட்கள் கிடைக்கின்றன, இதன் மிக பிரீமியம் மாடலான ஆர்2 எம் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 2.53 லட்சம் ரூபாய் வரை செல்கிறது. இந்த பைக்கிற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் 10,000 ரூபாய் முன்பணத்துடன் தற்போது தொடங்கியுள்ளன, இதன் வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி வரும் செப்டம்பர் மாதத்தின் பாதியில் இருந்து படிப்படியாகத் தொடங்கும் என யமஹா அறிவித்துள்ளது.

மறுபுறம், குறைந்த பட்ஜெட்டில் ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க நினைப்பவர்களுக்கான ஆரம்ப புள்ளியாக இருக்கும் யமஹா ஆர்15 வி4 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் 1.73 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகிறது. இதில் குயிக் ஷிப்டர் வசதி கொண்ட வேரியண்ட்களின் விலை தோராயமாக 2.01 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆர்2 பைக்கை விட ஆர்15 மாடலின் விலை சுமார் 57,000 ரூபாய் வரை குறைவாக இருப்பது இதன் கூடுதல் பிளஸ் ஆகும்.

நீங்கள் எந்த பைக்கை வாங்கலாம்?

சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்குக் குறைந்த எடையில், கையாளுவதற்கு எளிதான, அதே நேரத்தில் நல்ல மைலேஜ் மற்றும் பட்ஜெட் விலையில் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் வேண்டும் என்றால் யமஹா ஆர்15 வி4 பைக் ஒரு மிகச் சிறந்த தேர்வாகும். ஆனால், உங்களுக்கு பட்ஜெட் ஒரு தடை இல்லை, நெடுஞ்சாலைகளில் அதிக பவருடன், அதிர்வுகள் இல்லாமல் மணிக்கு 100 கி.மீ வேகத்திற்கு மேல் சீறிப்பாயக்கூடிய ஒரு பக்கா சூப்பர்பைக் போன்ற கம்பீரமான தோற்றமும், குரூஸ் கன்ட்ரோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் போன்ற காஸ்ட்லி வசதிகளும் வேண்டும் என்றால், நீங்கள் சற்றே கூடுதல் பணம் செலுத்தி புதிய யமஹா ஆர்2 பைக்கைத் தாராளமாகத் தேர்வு செய்யலாம்.

R15-ஐ தூக்கி சாப்பிடும் Yamaha R2! இளைஞர்கள் எந்த பைக் வாங்கலாம்?