கர்நாடகா : வாழ்க்கையில் ஏழையாக இருப்பவர்கள் உழைப்பால் எப்படி உயர்ந்த நிலைக்கு வரலாம் என்பதற்குப் பல கதைகளைக் கேட்டிருப்போம். ஆனால், தினமும் காலையில் ஒரு சொகுசு காரில் வந்து இறங்கி, கையில் துடைப்பத்தை எடுத்து சாலையைச் சுத்தம் செய்யும் ஒரு துப்புரவு தொழிலாளரைப் பற்றிப் பார்த்திருக்கிறீர்களா? கேட்பதற்கே ஆச்சரியமாக இருந்தாலும், கர்நாடக மாநிலத்தில் இது நிஜமாகவே நடந்துள்ளது.
சொந்தமாக டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் வாங்கி, அதில் தினமும் வேலைக்கு வந்து சாலையைச் சுத்தம் செய்யும் சேசப்பா (Sesappa) என்ற துப்புரவு பணியாளர் தான் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.
யார் இந்த சேசப்பா?
கர்நாடக மாநிலம் பன்ட்வால் (Bantwal) அருகிலுள்ள நவூர் பகுதியைச் சேர்ந்தவர் சேசப்பா. இவர் பன்ட்வால் நகராட்சியில் ஒரு நிரந்தர துப்புரவு தொழிலாளராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் 'டைஜிவேர்ல்ட்' (Daijiworld) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரைப் பற்றிய ஒரு சிறிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பயங்கர வைரலானது.
அந்த வீடியோவில், சேசப்பா தனது வெள்ளை நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை ஓட்டி வந்து நகராட்சி அலுவலகம் அருகே நிறுத்துகிறார். பின்னர் காரில் இருந்து இறங்கி, கையில் துடைப்பத்தை எடுத்து மிகவும் சாதாரணமாகச் சாலைகளைப் பெருக்கி சுத்தம் செய்கிறார். ஒரு துப்புரவு தொழிலாளி எப்படி இவ்வளவு பெரிய காரை வாங்கினார் என்ற மக்களின் கேள்விக்கு, தனது 30 ஆண்டுகால கடின உழைப்பின் கதையை அவர் பகிர்ந்துள்ளார்.
1996-ல் வெறும் ரூ.50 தினக்கூலி
சேசப்பாவின் இந்த வெற்றிப் பயணம் அத்தனை எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இவர் வெறும் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டில் பன்ட்வால் நகராட்சியில் துப்புரவு வேலைக்குச் சேர்ந்தபோது, இவருடைய தினசரி சம்பளம் வெறும் 50 ரூபாய் மட்டுமே.ஆரம்பகாலத்தில் கடுமையான நிதி நெருக்கடியால் இவரது குடும்பம் சாப்பாட்டிற்கே திண்டாடிய காலங்களும் உண்டு.
வறுமையின் காரணமாக ஒரு கட்டத்தில் மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். ஆனால், 2005 ஆம் ஆண்டு பன்ட்வால் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக இருந்த பெல்லியப்பா (தற்போது உடுப்பியில் டிஒய்எஸ்பி) என்பவர் சேசப்பாவிற்கு ஒரு நல்ல அறிவுரை வழங்கியுள்ளார். அதன்பின்னர் மதுப்பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்ட சேசப்பா, தனது குடும்பம் மற்றும் உழைப்பின் மீது முழு கவனத்தையும் திருப்பியுள்ளார்.
வாழ்க்கையை மாற்றிய தந்தையின் மரணம்
சேசப்பாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சோகம் அவரது தந்தையின் மரணம் ஆகும். அவரது தந்தை இறந்தபோது, இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட சேசப்பாவிடம் பணம் இல்லை. இதனால் வேறு வழியின்றி தனது தந்தையின் உடலைத் தானே சுமந்து சென்று நேத்ராவதி ஆற்றங்கரையில் இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளார்.
பணம் இல்லாததால் வாழ்க்கையில் ஏற்படும் அவமானமும் துயரமும் எவ்வளவு கொடூரமானது என்பதை இந்த சம்பவம் அவருக்குப் புரிய வைத்தது. தன் குடும்பத்திற்கு இனி இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று அன்றே அவர் மனதுக்குள் சபதம் எடுத்துக்கொண்டார்.
ஃபார்ச்சூனர் கார் வாங்கியது எப்படி?
நகராட்சி சம்பளத்தை மட்டுமே நம்பியிருந்தால் தன் இலக்கை அடைய முடியாது என்பதைச் சேசப்பா உணர்ந்தார். இதனால் தினமும் காலை 5 மணிக்கே நகராட்சி வேலைக்கு வந்து ரோடு பெருக்குவது, குப்பை வண்டிகளை ஓட்டுவது போன்ற கடமைகளை முடித்துவிடுவார். அதன்பிறகு கிடைக்கும் நேரத்தில் அவர் சும்மா இருக்கவில்லை. தனியாக விவசாயம் செய்வது, மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்வது மற்றும் உள்ளூர் பஞ்சாயத்தில் தண்ணீர் திறந்துவிடும் வேலை (Water supply) எனப் பல பகுதி நேர வேலைகளைச் செய்யத் தொடங்கினார். இப்படி ஓயாமல் உழைத்துச் சேர்த்த பணம் மற்றும் பழைய கார்களை விற்றுப் பெற்ற கடன்கள் மூலமாகவே, செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இருந்து இந்த டைப்-2 டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை அவர் வாங்கியுள்ளார்.
சைக்கிளில் தொடங்கி ஃபார்ச்சூனர் வரை
சேசப்பாவிற்கு ஆரம்பத்திலிருந்தே கார்கள் மீது தனி பிரியம் உண்டு. தனது உழைப்பில் முன்னேற முன்னேற, அவர் தனது வாகனங்களையும் தரம் உயர்த்திக்கொண்டே வந்துள்ளார். முதலில் சைக்கிள் பயன்படுத்திய அவர், பின்னர் மாருதி 800, ஓம்னி, ஆல்ட்டோ, ரிட்ஸ் மற்றும் ஸ்கார்பியோ போன்ற கார்களை அடுத்தடுத்து வாங்கிப் பயன்படுத்தியுள்ளார். இறுதியாகத் தனது கனவு காரான டொயோட்டா ஃபார்ச்சூனரை வாங்கியுள்ளார்.
எந்த வேலையும் குறைந்தது அல்ல!
சொகுசு கார் வைத்திருந்தாலும், தனது துப்புரவு தொழிலை விட அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. "நேர்மையான முறையில் செய்யும் எந்த வேலையும் சிறியது அல்ல. ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயன்படும் இந்த துப்புரவு வேலையைச் செய்வதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று சேசப்பா கூறுகிறார்.
இவரைப் பற்றி பன்ட்வால் நகராட்சி முதன்மை அதிகாரி தீர்த்தபிரசாத் கூறுகையில், "சேசப்பா மிகவும் அமைதியானவர், நேர்மையானவர் மற்றும் கடின உழைப்பாளி. காரைப்பற்றிய கவனம் சோசியல் மீடியாவில் இவ்வளவு கிடைத்த பிறகும், அவர் தினமும் அதிகாலையிலேயே தனது வேலைக்குச் சரியாக வந்துவிடுகிறார்" என்று பாராட்டியுள்ளார்.
