ஈரான் விவகாரம்: மௌனம் காக்கும் மத்திய அரசு – சோனியா காந்தி தாக்கு!

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை மோடி அரசு கண்டிக்காமல் இருப்பதற்கு சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

sonia gandhi narendra modi

டெல்லி :மத்திய கிழக்கில் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட மூத்த தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முற்றிலும் அழிப்பது, ஹிஸ்புல்லா, ஹூதி, ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு ஆதரவு நிறுத்துவது ஆகியவை இத்தாக்குதல்களின் முக்கிய நோக்கங்களாக அமெரிக்கா-இஸ்ரேல் தரப்பு கூறுகிறது.

இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான் கடும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஜோர்டான், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் சரமாரித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் முழு பிராந்தியமும் போர் நிலைக்கு மாறியுள்ளது.இந்த நிலையில், ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மோடி அரசு கண்டிக்காமல் இருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒரு இறையாண்மை நாட்டின் தலைவரை பேச்சுவார்த்தை நடக்கும் போதே படுகொலை செய்வது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சோனியா காந்தி மேலும் கூறியதாவது: “வசுதைவ குடும்பகம் என்று பேசும் இந்தியா, இத்தகைய இக்கட்டான சூழலில் மௌனம் சாதிப்பது அதன் சர்வதேச நம்பகத்தன்மையை கடுமையாக குறைக்கும். 1994-இல் காஷ்மீர் விவகாரத்தில் ஐநா சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக ஈரான் அளித்த பெரும் உதவியை மறந்துவிட்டு, பாஜக அரசு ஈரானுடனான வரலாற்று ராஜதந்திர உறவுகளை கைவிட்டுவிட்டது.”இந்தக் கண்டனம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக வெளியிடப்பட்டுள்ளது.

மோடி அரசு ஈரான் மீதான தாக்குதலை கண்டிக்காமல் இருப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் காட்டுவதாகவும், நீண்டகால உறவுகளை பாதிக்கும் என்றும் சோனியா வலியுறுத்தியுள்ளார். இது தற்போது உள்நாட்டு அரசியல் விவாதத்தையும் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது.