திமுகவின் நிலை என்ன? பாஜகவுடன் தொடர் இழுபறி – இன்று வெளியாகும் அதிமுகவின் 2ம் கட்ட பட்டியல்?

The list of candidates for the second phase of the AIADMK alliance will be released today.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான இடப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கூட்டணி, இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கும் பணி தீவிரமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சியை பொறுத்தளவில் 200 வார்டுகள் உள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, மதிமுக 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தை கட்சி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளதாகவும்,  காங்கிரஸ் கட்சி 20 வார்டு கேட்ட நிலையில், 14 வார்டுகளை மட்டுமே திமுக ஒதுக்க உள்ளதாகவும் சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேலும் 2 வார்டுகளை பெற தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இன்றைக்குள் சென்னை மாநகராட்சி வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

கூட்டணி கட்சிகள் நாளை பிற்பகல், திமுகவின் மாவட்ட செயலாளர்களுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யவுள்ளன. திமுகவை பொறுத்தளவில் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதை போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெருபாலான இடங்களில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மறுபுறம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மதியத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான இடப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டிருந்தனர்.

அதன்படி, சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, விழுப்புரம், திண்டிவனம், தருமபுரி நகராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டனர். அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், கடலூர் மாநகராட்சியின் 43 வார்டுகளுக்கான வேட்பாளர்கள், கடலூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களிலுள்ள நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் என 298 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது அதிமுக.

அதிமுகவிற்கு வெற்றிவாய்ப்பு உள்ள இடங்களை பாஜக கோருவதால் இட பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருவதாகவும், இன்று மாலைக்குள்ளாக அதிமுக போட்டியிடும் இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால், சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது என்றும் அதிமுகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து பாஜக விரைவில் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து சேலம் பயணம் மேற்கொண்டுள்ளார். எனவே, அதிமுக -பாஜக இடையே இன்று நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை என்றும் தொலைபேசி வாயிலாக மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் உடன் இன்று மாலை இரண்டாம் கட்ட இறுதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.