"கச்சத்தீவு எங்கள் பூமி.. என் மக்களுக்கு சொந்தமானது.." – இலங்கை அதிபர் திட்டவட்டம்.!

யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் அனுர குமார திட்டவட்டமாக கூறியுள்ளார்.

AnuraKumara Dissanayake

யாழ்ப்பாணம் :இலங்கை அதிபர் அனுர குமார திஸ்ஸநாயக, நேற்றைய தினம் (செப்டம்பர் 1)கச்சத்தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு, அங்கு மீனவர்களிடம் பேசியபோது, “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது, எந்த காரணத்தைக் கொண்டும் அதை விட்டுத் தரப் போவதில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

அவர் மீனவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, தீவின் இயற்கை அழகை ரசித்து, எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இது இலங்கை அதிபர் ஒருவர் கச்சத்தீவுக்கு சென்ற முதல் முறையாகும். கச்சத்தீவு விவகாரம், 1974-ல் இந்தியா-இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்டதிலிருந்து சர்ச்சையாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் கையெழுத்திட்டனர். 1976-ல் மற்றொரு ஒப்பந்தம் மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மேலும் கட்டுப்படுத்தியது. தமிழகத்தில் இந்த விவகாரம் அவ்வப்போது அரசியல் விவாதமாக எழுகிறது.

கடந்த 2024-ல், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறியபோது, இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான், கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் உள்ளது என்று பதிலளித்தார். இதன் காரணமாக, இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவது இந்த பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இருப்பினும், இலங்கை அதிபரின் சமீபத்திய பயணமும் அவரது உறுதியான நிலைப்பாடும் இந்த விவகாரத்தில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.