கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழியைப் போட்டீர்கள்? மனசாட்சி வேண்டாமா சி.எம். சார்? – விஜய்

தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து உங்களை சந்திக்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.

tvk vijay

சென்னை :வேலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர்  விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார். கூட்டத்திற்கு முன்பு அவரது வாகனத்தை ரசிகர்கள் மலர்தூவி, “TVK TVK” என்ற முழக்கங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர். காவல்துறை கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தொண்டர்களின் ஆர்வம் மிகுந்தது.கூட்ட அரங்கிற்கு அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக சில தவெகவினர் தடுப்புகளை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இதனால் காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர்.

இந்த சம்பவத்தில் பாதுகாப்புக்காக வந்த உதவி ஆய்வாளர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதை வெளிப்படுத்தியது.கூட்டத்தில் உரையாற்றிய விஜய், தனது பேச்சை குட்டிக்கதையுடன் தொடங்கினார். “முரட்டு ஜல்லிக்கட்டு காளைதான் தமிழ்நாட்டின் அரசியல்களம். ஜல்லிக்கட்டு காளையை தில்லாக அடக்கும் சிறிய பையன்தான் தவெக” என்று கூறி, தவெகவின் வலிமையை விளக்கினார்.

தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களை சந்திப்பேன் என்றும் உறுதியளித்தார்.விஜய் தனது உரையில், “இது விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையில் நடக்கும் போர்” என்று கூறினார். “எனக்கு எதிரான செயல்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவை. நானும் மக்களும் ரத்தமும் சதையும் போல். நான்தான் தமிழ்நாடு; தமிழ்நாடுதான் விஜய்” என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் “எல்லோரும் என் நண்பர்கள்” என்று கூறியது குறித்து, “கரூர் விவகாரத்தில் ஏன் என் மீது பழி போட்டீங்க? மனசாட்சி வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார். நாங்கள் எல்லோரும் உங்கள் நண்பர்கள் எனில் ஏன் எங்கள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுக்கிறீர்கள் எனவும் கேள்விகளை எழுப்பினார். மேலும், தேர்தல் குறித்து பேசிய விஜய், “இந்தத் தேர்தல் தமிழக மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். தமிழக மக்களுக்கும் லஞ்சத்திற்கும் நடக்கும் போர். தமிழக மக்களுக்கும் திமுக அரசுக்கும் நடக்கும் போர். தமிழக மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். சுருக்கமாகச் சொன்னால், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்” என்று கூறினார்.

மேலும் அதனை தொடர்ந்து, “தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு” என்று உறுதியுடன் பேசினார்.கூட்டத்தின் இறுதியில் விஜய் ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். “எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். இப்போ நான் சென்னைக்கு 4 மணி நேரம் டிராவல் பண்ணி போகணும். தயவுசெஞ்சி என் வண்டி பின்னாடியோ சைடுலயோ யாரும் பைக்ல வராதீங்க. நான் உங்கள கெஞ்சி கேட்டுக்கிறேன்” என்று கூறி, ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீராக இருக்க வேண்டும் என்று வேண்டினார். இந்த கூட்டம் தவெகவின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது.