3.70 லட்சம் பேருக்கு ஷாக் கொடுத்த மின் கட்டணம்... அதிரடியாக களமிறங்கிய மின்வாரியம்!

ஆகஸ்ட் 7-க்குள் கள ஆய்வு நடத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்கவும், தவறுகள் இருந்தால் உடனடியாகத் திருத்தவும் மின்வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Hero Image

சென்னை: தமிழகத்தில் கடந்த மே மாத மின் கட்டணத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் சுமார் 3.70 லட்சம் மின்சார இணைப்புகளுக்கு வழக்கத்தை விடக் கூடுதல் கட்டணம் வந்துள்ளதாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன.

நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தைக் தீவிரமாகக் கையில் எடுத்துள்ள மின்வாரிய நிர்வாக இயக்குநர், இதுகுறித்து உடனடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மறு ஆய்வு

தமிழகம் முழுவதும் கடந்த மாதங்களில் நுகர்வோர் செலுத்திய மின்சாரக் கட்டணத்தைக் காட்டிலும், ஜூலை மாதத்தில் லட்சக்கணக்கானோருக்குக் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளதாகப் புகார்கள் குவிந்தன. குறிப்பாக, 3.70 லட்சம் நுகர்வோருக்கு மின் கட்டணம் திடீரென அதிகரித்திருப்பது குறித்து உரிய மறு ஆய்வு செய்யுமாறு மின்வாரிய நிர்வாக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கணக்கீட்டுப் பிழைகள், கட்டண மாற்றங்கள் அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் காரணங்களால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து சரிசெய்வதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.

ஆகஸ்ட் 7 இறுதி கெடு

இந்த முக்கியமான ஆய்வுப் பணியில் மின்வாரியத்தின் பல்வேறு நிலை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தலைமைப் பொறியாளர், மேற்பார்வைப் பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், கணக்கு அதிகாரிகள் மற்றும் மதிப்பீட்டு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து நிலை அதிகாரிகளும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மின் கட்டணம் மிக அதிகமாக வந்துள்ளதாகக் கூறப்படும் வீடுகள் மற்றும் வணிக அலுவலகங்களுக்கு நேரில் சென்று இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த முழுமையான ஆய்வுப் பணியும் வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடனடியாகத் திருத்த உத்தரவு

கள ஆய்வின் போது நுகர்வோரின் மின் கட்டணத்தில் ஏதேனும் தவறுகளோ அல்லது முறைகேடுகளோ கண்டறியப்பட்டால், உடனடியாக அதனைச் சரிசெய்வதற்கான உரிய திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மின்வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள மின் கட்டணச் சுமையைக் குறைக்கும் வகையிலும், நுகர்வோரின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் வகையிலும் மின்வாரியத்தின் இந்தத் துரித நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.