வாஷிங்டன், ஆகஸ்ட் 12: ஈரான் ஏவுகணை வீசித் தாக்கக்கூடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக, துருக்கியில் நடந்த மாநாட்டின் போது தனது அதிகாரப்பூர்வ ‘ஏர் போர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்திலிருந்து, மற்றொரு சிறிய ராணுவ விமானத்திற்குத் தான் ரகசியமாக மாறியதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது உறுதி செய்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக டிரம்ப் ரகசியமாகத் தப்பித்துவிட்டார். ஆனால், அதிபர் இன்னும் அந்த விமானத்தில்தான் இருக்கிறார் என்று ஈரானை நம்ப வைப்பதற்காக, பத்திரிகையாளர்களையும் அதிகாரிகளையும் அதே ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்ய வைத்ததுதான் இப்போது அமெரிக்காவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தங்களைத் 'திசைதிருப்பும் பகடைக்காய்களாக' (Decoys) பயன்படுத்தியதாக பத்திரிகையாளர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
என்ன நடந்தது துருக்கியில்?
கடந்த ஜூலை 8 அன்று துருக்கியில் நேட்டோ (NATO) மாநாடு நடந்தது. மாநாட்டிற்குப் பிறகு வாஷிங்டன் திரும்ப டிரம்ப் தயாரானார். அப்போது, சியூட்டா எல்லைப் பகுதியில் இருந்து ஈரான் தோளில் சுமந்து செல்லும் ஏவுகணைகளைக் கொண்டு டிரம்ப்பின் விமானத்தை வீழ்த்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை எச்சரித்தது.
டிரம்ப் வந்த புதிய சொகுசு விமானத்தில் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், உடனடியாக மாற்றுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சரக்கு பெட்டியில் மறைந்து தப்பிய டிரம்ப்:
எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் மிக ரகசியமாகச் செயல்பட்டனர். டிரம்ப்பை யாருக்கும் தெரியாமல் உணவு விநியோக வண்டியிலும், சரக்குப் பெட்டியிலும் மறைத்து அதிகாரிகள் வெளியேற்றினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பெரிய சரக்குப் பெட்டிகளின் வழியாக, அருகில் நின்ற சிறிய ராணுவ விமானத்திற்கு டிரம்ப் மாற்றப்பட்டார்.
ஆத்திரத்தில் பத்திரிகையாளர்கள்:
அதே நேரத்தில், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த 12 பத்திரிகையாளர்களுக்கும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இந்த ரகசிய மாற்றம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டிரம்ப் இன்னும் விமானத்தில்தான் இருக்கிறார் என்று காட்டி ஈரானை ஏமாற்றுவதற்காக, அவர்கள் அனைவரும் அதே ஆபத்தான சூழ்நிலையிலும் அசல் விமானத்திலேயே அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் ஒருவர், "அதிபரைப் பாதுகாப்பது எங்கள் வேலை அல்ல, அவரைப் பற்றிச் செய்தி சேகரிப்பது மட்டுமே எங்கள் வேலை. எங்களின் உயிரை ஆபத்தில் தள்ளி எங்களை ஏமாற்றுப் பாத்திரமாகப் பயன்படுத்தியிருக்கக் கூடாது" என்று கொதித்துள்ளார்.
டிரம்பின் கிண்டல் பேச்சு:
விமானத்தில் ஜன்னல் திரைகளை ஏன் மூடச் சொன்னீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நாம் கையாளும் ஆட்கள் அப்படிப்பட்டவர்கள். எனவே அது ஒரு ஆபத்தான பயணமாக இருக்க வாய்ப்பிருந்தது. நான் போனால், நீங்களும் போக வேண்டியதுதான், சரியா? ஒருவேளை உங்களுக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்றால் வேறு வேலைக்கு மாறிக் கொள்ளுங்கள்" என்று டிரம்ப் கிண்டலாகப் பதிலளித்துள்ளார்.
