டெல்லி : சாலையில் செல்லும் அனைவரின் பார்வையும் தன் மீது படும் வகையில் அட்டகாசமான தோற்றத்தையும், அதே நேரத்தில் மிகச்சிறந்த செயல்திறனையும் தரக்கூடிய பைக்குகளைத் தேடுபவர்களுக்கு பாபர் ரக மோட்டார்சைக்கிள்கள் சிறந்த தேர்வாக விளங்குகின்றன. அந்த வகையில், சந்தையில் விற்பனை ஆகும் டாப் சில பைக்குகளை பற்றி நாம் இந்த செய்தியில் விவரமாக பார்ப்போம்.
ஜாவா 42 பாபர் (Jawa 42 Bobber)
இந்திய சந்தையில் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் நவீன தோற்றம் கொண்ட பாபர் மோட்டார்சைக்கிளாக ஜாவா 42 பாபர் திகழ்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 2.05 லட்சம் முதல் ரூ. 2.29 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது குறைந்த இருக்கை உயரம் (Low-slung stance), சிங்கிள் ஃப்ளோட்டிங் சீட், பார்-எண்ட் மிரர்கள் மற்றும் வலிமையான பெட்ரோல் டேங் ஆகியவற்றைக் கொண்டு ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது.
இதில் டிஜிட்டல் கன்சோல், முழுமையான எல்இடி லைட்டிங் மற்றும் இருவழிadjustable இருக்கை போன்ற நவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. செயல்திறனைப் பொறுத்தவரை, இதில் 334சிசி லிக்யூடு-கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 30.64 பிஎஸ் பவரையும், 32.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் அண்ட் ஸ்லிப் கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரப் பயணங்களை மிகவும் சௌகரியமாக மேற்கொள்ளலாம். பாதுகாப்புக்காக இதில் டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. மைலேஜைப் பொறுத்தவரை, இப்பைக் லிட்டருக்கு தோராயமாக 30 முதல் 35 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
ஜாவா பெராக் (Jawa Perak)
நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் தனித்துவமான ஐகானிக் பாபர் மோட்டார்சைக்கிள் வரிசையில் ஜாவா பெராக் முக்கிய இடம்பிடிக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 2.16 லட்சம் முதல் ரூ. 2.22 லட்சம் வரை உள்ளது. இதன் முழு வடிவமைப்பும் முற்றிலும் டார்க் பாபர் (Dark Bobber) தீமை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மேட் பிளாக் பெயிண்ட், டேன் நிறத்திலான ஃப்ளோட்டிங் சீட் மற்றும் ஸ்விங்ஆர்ம்-மவுண்ட்டட் பின்புற பெண்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அனலாக்-டிஜிட்டல் கன்சோல், மறைக்கப்பட்ட டெயில்லைட் மற்றும் வட்ட வடிவ ஹெட்லைட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
இதன் செயல்திறனுக்காக 334சிசி லிக்யூடு-கூல்டு டிஓஎச்சி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 30.64 பிஎஸ் பவரையும், 32.74 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளதால் நெடுஞ்சாலைகளில் இதன் செயல்பாடு மிகச்சிறப்பாக இருக்கும். உயர் வேகத்திலும் பைக்கை முழுமையாகக் கட்டுப்படுத்த உதவும் வகையில் டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஜாவா பெராக் பைக்கானது லிட்டருக்கு சுமார் 30 கி.மீ வரை மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கோவா கிளாசிக் 350 (Royal Enfield Goan Classic 350)
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மிக நேர்த்தியான கஸ்டம்-ஸ்டைல் பாபர் மோட்டார்சைக்கிளாக கோவா கிளாசிக் 350 விளங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 2.10 லட்சம் முதல் ரூ. 2.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பில் மிட்-ஹைட் ஹேண்ட்லார்பார்கள், பிரகாசமான வண்ணத் தேர்வுகள், ஃப்ளோட்டிங் சீட் மற்றும் ஸ்போக்டு வீல்கள் ஆகியவை பாரம்பரிய கிளாசிக் பாபர் தோற்றத்தைத் தருகின்றன. செமி-டிஜிட்டல் கன்சோல், டிரிப்பர் நெவிகேஷன், எல்இடி லைட்டிங் மற்றும் யூஎஸ்பி சார்ஜர் போன்ற நவீன வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதன் செயல்திறனுக்காக 349சிசி ஏர்-ஆயில் கூல்டு ஜே-சீரிஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மிகவும் ஸ்மூத்தான சவாரி அனுபவத்தை வழங்குகிறது. பாதுகாப்புக்காக டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் டூப்லெஸ் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளதால் டயர் பஞ்ச்சர் ஆனாலும் பாதுகாப்பாகப் பயணிக்கலாம். ராயல் என்ஃபீல்டின் இந்த மாடல் லிட்டருக்கு தோராயமாக 35 முதல் 40 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
