சென்னை :கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் த.வெ.க தலைவர் விஜய் மற்றும் திமுக குறித்து தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்துள்ளார். செய்தியாளர் ஒருவர் ஆரம்பத்தில் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என ஆதரவு கொடுத்து இப்போது விமர்சனம் ஏன் என சமூக வலைத்தளங்களில் காணொளியை பலரும் வெளியிட்டு வருவது குறித்து தன்னுடைய கேள்விகளை எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த சீமான் ” எங்களுடைய ஊரில் நாடகத்தில் ஒரு பாடல் பாடுவார்கள். அது என்ன பாடல் என்றால் நாட்டிற்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தேனுங்க என்று..நீங்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தபோது சேவை செய்ய வந்தேன் என்று சொல்லலாம். நீங்கள் சினிமாவில் நடித்துக்கொண்டு இருந்தீங்க சந்தையில் உங்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. உங்களுக்கு வியாபாரம் இருக்கிறது என்றும் தெரிகிறது.
நான் உங்களுக்காக என்னுடைய உச்சத்தை என்னுடைய வருவாயை விட்டுவிட்டு வந்தேன் விட்டுவிட்டு வந்தேன் என்று சொன்னால் என்ன கேள்வி கேட்க தோன்றும்? உங்களை யார் உச்சத்தை விட்டு வர சொன்னது என்றுதானே கேட்க தோணும்? 600 ஏக்கரை நாட்டிற்காக எழுதி வாய்த்த ஜம்புலிங்கம் இப்படி தான் பேசிக்கொண்டு இருந்தாரா? சொத்தை வித்து நாட்டின் சுதந்திரத்திற்காக செலவு செய்த வ வு சி இப்படி தான் பேசிக்கொண்டு இருந்தாரா? எனவும் காட்டத்துடன் கேள்வி எழுப்பினார்.
அரசியலுக்கு வந்தால் இதெல்லாம் சொல்லக்கூடாது.. இப்படியெல்லாம் பேசுவதை பார்த்தால் உங்களை யார் வரச்சொன்னது நீ போய் உச்சத்தில் இருப்பா என்று தான் சொல்ல தோணுகிறது. தி.மு.க., அ.தி.மு.க.வை அழிக்க போராடிக்கொண்டிருக்கும் போது மீண்டும் அண்ணா, எம்.ஜி.ஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை எதிர்த்து பேசினால் தி.மு.க. கைக்கூலி என்கிறார்கள். விஜயை விமர்சிப்பதால் தி.மு.க.விடம் நான் பெட்டி வாங்கி விட்டதுபோல் பேசுகின்றனர். தி.மு.க.வை எதிர்த்து பேசினால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கைக்கூலி எனக் கூறுகிறார்கள்” எனவும் சீமான் தெரிவித்தார்.
