நாங்கள் திமுக கூட்டணியை உதறிவிட்டு ஓடவில்லை...தொல். திருமாவளவன் ஸ்பீச்!

நாங்கள் திமுக கூட்டணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகவில்லை. அமைச்சரவையில் இணைந்ததால் மட்டும் கூட்டணி மாறியதாக அர்த்தமல்ல என திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.

Hero Image

சென்னை : அமைச்சரவையில் இணைந்ததால் திமுகவுடனான கூட்டணியை விசிக முறித்துக் கொண்டதாகச் சொல்லப்படும் விமர்சனங்களுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இது குறித்து திருமாவளவன் கூறுகையில், "ஆட்சி அமைப்பதற்கு இரண்டு இடங்கள் பற்றாக்குறை இருந்தபோது, முதலமைச்சர் திரு. விஜய், விசிக-வின் ஆதரவைக் கோரினார். அப்போதும் சரி, இப்போதும் சரி, நாங்கள் அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியிலிருந்து விலகவில்லை. அமைச்சரவையில் இணைந்ததாலேயே நாங்கள் இன்னொரு கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தமல்ல. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தந்த பிறகும், கூட்டணி தொடர்பாக ஜூலை 1-ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைமையில் இதுவரை எந்தக் கூட்டணியும் உருவாகவில்லை என்பதே உண்மை," என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியிலிருந்து விலகி விசிக துரோகம் இழைத்துவிட்டதாக வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "நாங்கள் திடீரென பதவியைக் கண்டு கூட்டணியை உதறிவிட்டு ஓடிவிடவில்லை. ஒவ்வொரு முடிவையும் அண்ணன் ஸ்டாலினின் கவனத்திற்குக் கொண்டு சென்றே எடுத்துள்ளோம். அவருடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு, நட்பு ரீதியாகவே இந்த முடிவுகளை மேற்கொண்டோம். திமுக தலைமையுடனான எங்களது உறவும் நட்பும் இன்றும் தொடர்கிறது," எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பொது இடங்களில் 'ரீல்ஸ்' (Reels) எடுப்பது குறித்த கேள்விக்கு, "இன்று அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் என அனைவரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வது ஒரு வாடிக்கையாகிவிட்டது. சமூக ஊடகங்கள் வலிமையான இந்தக் காலத்தில் எதையும் தவிர்க்க முடியாது.

பொது ஒழுங்குக்கு அது கேடாக இருந்தால், அதைச் சுட்டிக்காட்டுவோம்; நிச்சயம் அமைச்சர்கள் அதைப் புரிந்துகொண்டு தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன். சமூகப் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்," என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

நாங்கள் திமுக கூட்டணியை உதறிவிட்டு ஓடவில்லை...தொல். திருமாவளவன் ஸ்பீச்!