சட்டமன்றம் ஷூட்டிங் ஸ்பாட் அல்ல – முதல்வர் விஜய்யை விளாசிய ஸ்டாலின்!

யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக சட்டமன்றத்தில் கடந்த சில நாட்களாக ஆளும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா (MISA) சிறைவாசம் குறித்து நிலவி வரும் கடுமையான அரசியல் போருக்கு, தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது புதிய அதிகாரப்பூர்வ வீடியோ பதிவு மூலம் பதிலடியைக் கொடுத்துள்ளார்.

கடந்த வாரம் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது தாடையைக் காட்டி, மு.க.ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தைக் கிண்டல் செய்யும் தொனியில் சைகை செய்திருந்ததற்கு, இந்த வீடியோவில் ஸ்டாலின் மிக உருக்கமாகவும் ஆக்ரோஷமாகவும் பதில் அளித்துள்ளார். மேலும், தற்போதைய தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் தேர்தல் அந்தர் பல்டிகளைப் பட்டியலிட்டு, முதல்வர் விஜய்யை ஒரு 'திறனற்ற முதலமைச்சர்' என சாடியுள்ளார்.

வீடியோவில் முதல்வர் விஜய்யை நோக்கிப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "நீங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சரான அடுத்த நொடி, எனது இல்லத்திற்கு நேரில் வந்து என்னைச் சந்தித்தீர்கள். அப்போது என்னிடம், 'தேர்தல் நேரத்தில் உங்களை மிகவும் தரம் தாழ்த்தி, கடுமையாக விமர்சித்துப் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் (I am sorry sir)' என்று நெகிழ்ச்சியோடு கூறினீர்கள். அதற்கு நான், 'பரவாயில்லை பிரதர், நான் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. நீங்கள் இப்போது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற மிக உயரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். இனிமேல் பேசும்போது அந்தப் பதவிக் கண்ணியத்தோடு பேசுங்கள்' என்று அன்போடு அறிவுரை கூறினேன். ஆனால், நீங்கள் அதை மிக எளிதாக மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறது" என்று சாடினார். முதலமைச்சர் என்ற பெரிய பொறுப்பிற்கான கண்ணியத்துடன் உங்களது வார்த்தைகளும் உடல்மொழியும் சட்டமன்றத்திற்குள் இருக்க வேண்டும் என்று விஜய்-க்கு அவர் டோஸ் விட்டார்.

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது தாடையைக் காட்டிச் செய்த சைகைக்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், "விஜய் அவையில் கையை வைத்துத் தாடையைக் காண்பித்தது ஒருவகையில் சரிதான். ஏனெனில், அவசரநிலை (Emergency) காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் நான் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கு நடந்த கொடூரத் தாக்குதலால் உடைந்துபோன எனது தாடை எலும்பில் இன்னமும் அதற்கான தழும்புகள் அப்படியே இருக்கின்றன" என்றார்.

போராளிகளுக்கு இந்தத் தழும்புகள் புதிதல்ல என்று முழங்கிய அவர், அன்றைய இந்திரா காந்தி அரசு மெரினாவில் கலைஞர் நடத்திய பிரம்மாண்ட கூட்டத்திற்குப் பின் திமுக ஆட்சியைக் கலைத்த அடுத்த நொடி, நள்ளிரவில் தன்னைக்கைது செய்யக் கோபாலபுரம் வீட்டிற்குப் போலீஸ் வந்த விபரங்களை விவரித்தார்.

அன்று தான் வீட்டில் இல்லாததால், "மகன் பிரசாரத்திற்குப் போயிருக்கிறான், நாளை வந்ததும் நானே போன் செய்கிறேன், வந்து கைது செய்யுங்கள்" என்று கலைஞர் போலீஸை அனுப்பி வைத்தார் என்றும், அடுத்த நாள் தான் வந்ததும் கலைஞரே போலீஸை வரவழைத்துத் தன்னைச் சிறைக்கு அனுப்பி வைத்தார் என்றும் கூறினார். சிறையில் தங்களைத் தொழு நோயாளிகள் இருக்கும் இடத்தில் அடைத்து, 10 பேரை ஒரு சிறிய அறைக்குள் பூட்டினார்கள் என்றார். அந்த அறைக்குள்ளேயே ஒரு பானையில்தான் அனைவரும் சிறுநீர் கழிக்க வேண்டும்; அந்தத் துர்நாற்றத்திற்கு நடுவில்தான் தாங்கள் தூங்க வேண்டும் என்றார்.

நள்ளிரவில் தூங்க விடாமல் பூட்ஸ் கால்களாலும், லத்திகளாலும் அடித்ததோடு, ஆயுள் தண்டனை கைதிகளை ஏவி தங்களைக் கொடூரமாக உதைத்தார்கள் என்றார். அந்த அடியைத் தடுத்துத் தன் மீது விழுந்த அடி தாங்காமல் தான் தனது அருமை அண்ணன் எம்.பி. சிட்டி பாபு சிறையிலேயே தன்னுயிரைத் தியாகம் செய்தார் என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிற்காகப் போராடிய போராளிகள் அனைவரும் இத்தகைய கொடூர அடக்குமுறைகளைக் கடந்துதான் வந்துள்ளனர் என்பதை விஜய்க்கு நினைவூட்டினார்.

தற்போதைய தவெக அரசின் ஆட்சி நிர்வாகத்தை மிகக் கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின், "உங்கள் ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் படுகுழியில் வீழ்ந்து கிடக்கிறது" என்று குற்றம் சாட்டினார். பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்ததன் மூலம், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை நீங்கள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பின்னுக்குக் கொண்டு போய் நிறுத்திவிட்டீர்கள் என்று சாடினார். விவசாயிகளின் கடன்களை நீங்கள் இன்னும் முழுமையாகத் தள்ளுபடி செய்யவில்லை. மகளிர் உரிமைத்தொகையாக நாங்கள் கொண்டு வந்த 1000 ரூபாய் திட்டத்தையே நீங்களும் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் சிலிண்டருக்கு மானியம் தருவோம் என்று சொல்லிவிட்டு இப்போது பெரிய அந்தர் பல்டி அடித்துள்ளீர்கள் என்று அம்பலப்படுத்தினார்.

தேர்தலின் போது சொன்னது ஒன்று, இப்போது செய்வது ஒன்று எனப் பல முக்கிய வாக்குறுதிகள் பற்றி முதலமைச்சர் வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பதாகக் குறிப்பிட்டார். மாற்றம் வேண்டும் என்று தவெக-வுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களும், குறிப்பாக இளைஞர்களும் இப்போது என்ன மாற்றம் வந்திருக்கிறது என்பதைத் தயவுசெய்து கவனித்துப் பார்க்க வேண்டும் என்றும், எது திறமையான அரசு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வீடியோவின் இறுதியில், முதல்வர் விஜய்யின் சினிமா பின்னணியை விமர்சித்த மு.க.ஸ்டாலின், "மக்களின் ஜனநாயகக் கோவிலான சட்டமன்றத்தை நீங்கள் 'ரீல்ஸ்' (Reels) எடுக்கக்கூடிய ஒரு ஷூட்டிங் ஸ்பாட் போல மாற்றிவிட்டீர்கள்" என்று சாடினார். கடந்த காலத் திமுக ஆட்சியில் நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பார்த்துப் பார்த்துக் கட்டிய பிரம்மாண்டமான மேம்பாலங்கள் மற்றும் திட்டங்களின் மீது ஏறி நின்று கொண்டு, தற்போதைய முதலமைச்சர் போட்டோஷூட் (Photoshoot) நடத்தி, ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்தையுமே ஒரு சினிமா ஷூட்டிங் மாதிரி ஜாலியாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

தங்களது திறனற்ற மற்றும் வக்கற்ற ஆட்சி நிர்வாகத்தை மறைப்பதற்காக, சமூக வலைத்தளங்களில் விதவிதமாக ரீல்ஸ் வீடியோக்களைப் போட்டு ஒரு புதிய இளம் தலைமுறையையே நீங்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார். "உண்மை ஊரைத் தாண்டுவதற்குள், பொய் உலகத்தைச் சுற்றி வரும்" என்கிற பழமொழிக்கு ஏற்பத்தான் தற்போதைய தவெக அரசின் விளம்பர அரசியல் அமைந்திருக்கிறது என்று கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வீடியோ பதிவின் மூலம் முதல்வர் விஜய்க்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சட்டமன்றம் ஷூட்டிங் ஸ்பாட் அல்ல – முதல்வர் விஜய்யை விளாசிய ஸ்டாலின்!