பெட்ரோல் Vs எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! மாதம் ரூ.2,000 செலவா? ரூ.300 போதுமா?

பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பயணச் செலவு, பராமரிப்புச் செலவு, சார்ஜிங் நேரம் மற்றும் லாங் ரைடு வசதிகளை ஒப்பிட்டு பார்த்து யாருக்கு எந்த வாகனம் சிறந்தது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

Hero Image

டெல்லி : இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் தற்போது ஒரு புதிய வண்டியை வாங்க நினைக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் எழும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் "பெட்ரோல் வண்டி வாங்கலாமா அல்லது எலக்ட்ரிக் வண்டி வாங்கலாமா?" என்பதுதான். உங்களது தினசரி பயணம் முழுவதும் நகர்ப்புற அல்லது உள்ளூர் ஏரியாக்களுக்குள் மட்டுமே இருக்கிறது என்றால், ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உங்களது மாதாந்திர செலவை மிக அதிக அளவில் குறைக்கும்.

அதே சமயம், நீங்கள் அடிக்கடி லாங் ரைடு செல்பவர் மற்றும் அவசரத்திற்கு உடனுக்குடன் வண்டியைப் பயன்படுத்த நினைப்பவர் என்றால் பெட்ரோல் ஸ்கூட்டரே எப்போதுமே அசைக்க முடியாத சாய்ஸ் ஆகும். குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது தினசரி கிலோமீட்டர், சார்ஜிங் வசதி மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் எந்த வண்டியைத் தேர்வு செய்யலாம் என்பதை பற்றி இந்த செய்தில் விவரமாக பார்ப்போம்.

பெட்ரோல் Vs எலக்ட்ரிக் கணக்கு

ஹோண்டா ஆக்டிவா அல்லது டிவிஎஸ் ஜூபிடர் போன்ற ஒரு பெட்ரோல் ஸ்கூட்டர் சாதாரண தினசரி பயன்பாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது. தமிழ்நாட்டில் தற்போது பெட்ரோல் விலை ஒரு லிட்டர் சுமார் ரூ.100 முதல் ரூ.105 வரை விற்கப்படும் இந்தச் சூழலில், பெட்ரோல் வண்டிகளின் பயணச் செலவு ஒரு கிலோமீட்டருக்குத் தோராயமாக ரூ.2 முதல் ரூ.2.50 காசுகள் வரை ஆகிறது.

இதன் அடிப்படையில், தினமும் 30 கிமீ பயணிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மாதாந்திர பெட்ரோல் செலவு மட்டுமே மிக எளிதாக ரூ.2,000-ஐ தாண்டிவிடுகிறது. ஆனால், ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தினசரி பயணச் செலவு பெட்ரோல் வண்டிகளை விட பலமடங்கு மிகக் குறைவானதாகும். வண்டியின் பேட்டரி திறன் மற்றும் தமிழ்நாட்டின் வீட்டு மின்சாரக் கட்டணத்தின்படி பார்த்தால், எலக்ட்ரிக் வண்டிகளின் பயணச் செலவு ஒரு கிலோமீட்டருக்கு வெறும் ரூ.0.25 முதல் ரூ.0.40 காசுகள் மட்டுமே ஆகும். இதன்படி, தினமும் 30 கிமீ பயணிக்கும் ஒரு ஆபீஸ் அல்லது கல்லூரி செல்லும் நபரின் மாதாந்திர இவி சார்ஜிங் செலவு வெறும் ரூ.300-க்குள் கச்சிதமாக அடங்கிவிடும். பெட்ரோல் செலவோடு ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட 90 சதவீதப் பணச் சேமிப்பாகும்.

பராமரிப்புச் செலவு எவ்வளவு?

பெட்ரோல் ஸ்கூட்டர்களில் இன்ஜின், கியர்பாக்ஸ், கிளட்ச் பெல்ட், ஸ்பார்க் பிளக் மற்றும் ஏர் ஃபில்டர் போன்ற எக்கச்சக்கமான நகரும் மெக்கானிக்கல் பாகங்கள் நிறைந்துள்ளன. இதனால், வண்டி நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு 2,000 முதல் 3,000 கிலோமீட்டருக்கு ஒருமுறை கட்டாயம் இன்ஜின் ஆயில் மாற்றுவது மற்றும் ஷோரூம் சர்வீஸ் செய்வது அவசியமாகும். இது காரின் நீண்ட காலப் பராமரிப்புச் செலவை கணிசமாக உயர்த்துகிறது.

மறுபுறம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இத்தகைய சிக்கலான இன்ஜின் அமைப்புகளோ அல்லது கியர்பாக்ஸ் பாகங்களோ கிடையாது. இதில் ஒட்டுமொத்த இயக்கமும் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் மூலமாகவே நடக்கிறது. இதனால் எலக்ட்ரிக் வண்டிகளில் இன்ஜின் ஆயில் மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. உங்களது பராமரிப்புச் செலவு என்பது வெறும் டயர்கள், பிரேக் பேடுகள் மற்றும் சஸ்பென்ஷன் போன்ற தேய்மானப் பொருட்களைச் சரிபார்ப்பதோடு மட்டுமே முடிந்துவிடுவதால், பெட்ரோல் வண்டிகளை விட இவைகளின் மெயின்டனன்ஸ் செலவு 70 சதவீதம் வரை மிகவும் குறைவு.

சார்ஜிங் நேரம் Vs பெட்ரோல் வசதி

பெட்ரோல் ஸ்கூட்டர்களின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டே அதன் அசாத்திய ரீஃபியூலிங் (Refuelling) வேகம் தான். தமிழ்நாட்டின் எந்தவொரு மூலை முடுக்கிலும், நெடுஞ்சாலைகளிலும் பெட்ரோல் பங்க்குகள் மிகத் தாராளமாகக் கிடைக்கின்றன. அவசரத்திற்கு வெறும் 2 நிமிடங்களில் பெட்ரோலை நிரப்பிவிட்டு, எந்தவொரு முன் திட்டமிடலும் இல்லாமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் லாங் ரைடு தொடர்ந்து பயணிக்கலாம்.

ஆனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குச் சற்று முன் தயாரிப்பும் திட்டமிடலும் தேவைப்படுகிறது. ஒரு சாதாரண வீட்டுச் சார்ஜர் மூலம் வண்டியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யத் தோராயமாக 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகும். இருப்பினும், தினசரி சிட்டிக்குள் மட்டும் வண்டியைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் இரவு நேரத்தில் தங்களது வீடுகளில் அல்லது அப்பார்ட்மெண்ட்களில் வண்டியை எளிதாகச் சார்ஜ் செய்யக்கூடிய வசதி உள்ளவர்களுக்கு இந்த சார்ஜிங் நேரம் ஒரு பெரிய குறைபாடாகத் தெரியாது.

எது பெஸ்ட்?

உங்களது தினசரி ஆபீஸ், கல்லூரி அல்லது உள்ளூர் மார்க்கெட் பயணங்கள் அனைத்தும் 25 கிமீ முதல் 60 கிமீ வரம்பிற்குள் மட்டுமே இருக்கிறது, வண்டியைச் சார்ஜ் செய்ய வீட்டில் ஒரு சாதாரண 5-ஆம்ப் பிளக் பாயிண்ட் வசதி உள்ளது என்று நினைத்தால், நீங்கள் எந்தவித யோசனையும் இல்லாமல் தாராளமாக ஓர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேர்வு செய்யலாம். இது உங்களது மாதாந்திர பெட்ரோல் செலவை ஒட்டுமொத்தமாக மிச்சப்படுத்தி, வருடத்திற்கு ரூ.24,000-க்கும் மேல் பெரிய பணச் சேமிப்பைத் தரும்.

ஆனால், உங்களது தினசரி பயணம் 100 கிலோமீட்டருக்கும் அதிகமாக இருக்கிறது, அடிக்கடி நெடுஞ்சாலைகளில் அவசரமாக லாங் ரைடு செல்ல வேண்டிய சூழல் உள்ளது, அல்லது அப்பார்ட்மெண்ட்களில் வசிப்பதால் வண்டியைச் சார்ஜ் செய்ய எந்தவொரு நம்பகமான சார்ஜிங் பிளக் வசதியும் இல்லை என்பவர்கள் எப்போதுமே தங்களது பழைய பாரம்பரியமிக்க பெட்ரோல் ஸ்கூட்டரையே தேர்வு செய்வதுதான் நூறு சதவீதம் பாதுகாப்பான மற்றும் சௌகரியமான முடிவாகும்.

1 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

  • ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1 X - 2 kWh): பட்ஜெட் விலையில் ஒரு மாடர்ன் இவி வண்டியைத் தேடுபவர்களுக்கான சிறந்த சாய்ஸ் இதுவாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.83,000 பட்ஜெட்டில் தொடங்குகிறது. இது சிங்கிள் சார்ஜில் 95 முதல் 108 கிமீ வரை மைலேஜ் தருவதுடன், மணிக்கு 85 முதல் 90 கிமீ வேகத்தில் சீறிப்பாயும் பவர் கொண்டது.
  • டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube - 2.2 kWh): வண்டியின் தரம் மற்றும் பக்கா ஃபேமிலி லுக் முக்கியம் என்பவர்களுக்கான நம்பகமான தேர்வு இது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.95,000 பட்ஜெட்டில் அமைகிறது. தமிழ்நாட்டில் பரந்து விரிந்து கிடக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் சிறந்த கட்டமைப்பு தரம் புதிய வாடிக்கையாளர்களுக்குப் பெரிய மனநிம்மதியைத் தருகிறது.
  • ஹீரோ விடா VX2 கோ (Hero Vida VX2 Go): அடுக்குமாடி குடியிருப்பில் (Apartment) வசிப்பவர்களுக்கும், வண்டி நிறுத்தும் இடத்தில் சார்ஜிங் பிளக் இல்லாதவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் ஆகும். இதன் விலை சுமார் ரூ.74,000 முதல் ரூ.78,000 வரை கிடைக்கிறது. இதிலுள்ள பேட்டரியைக் கழற்றி வீட்டிற்குள் எடுத்துச் சென்று மொபைல் போல மிக எளிதாகச் சார்ஜ் செய்து கொள்ளலாம் (Removable Battery). இது 90 முதல் 92 கிமீ வரை மைலேஜ் தரும்.
  • பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak C2501 / C3001): பிளாஸ்டிக் பாடி பிடிக்காதவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த வண்டியைத் தேர்வு செய்யலாம். இது முழுக்க முழுக்க உறுதியான முழு மெட்டல் பாடி (Metal-Body) உடல் கட்டமைப்பைக் கொண்டு பாரம்பரிய தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.87,000 முதல் 1 லட்சம் வரை வேரியண்ட்டைப் பொறுத்து அமைகிறது. இது 113 முதல் 127 கிமீ வரை சிறந்த மைலேஜை வாரி வழங்குகிறது.
  • கோமகி மற்றும் ஆம்பியர் மேக்னஸ் (Ampere Magnus): தாராளமான இடவசதி மற்றும் அகலமான ஃபுளோர்போர்டு வசதியைக் கொண்டுள்ள சிறந்த ஃபேமிலி ஸ்கூட்டராக இது வலம் வருகிறது. இதன் விலை சுமார் ரூ.85,000 முதல் ரூ.92,000 வரை கிடைக்கிறது. இது சிங்கிள் சார்ஜில் 80 முதல் 95 கிலோமீட்டர் வரை கச்சிதமான மைலேஜை வழங்குகிறது.
பெட்ரோல் Vs எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! மாதம் ரூ.2,000 செலவா? ரூ.300 போதுமா?