புதுச்சேரி :தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்.. தவெக ஆதரவு கேட்டு சிபிஐ வேட்பாளர் சலீம் கடிதம்!

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை சந்தித்து ஆதரவு கோரி கடிதம் வழங்கியுள்ளார்.

Hero Image

புதுச்சேரி : மாநிலத்தின் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6, 2026 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.

தற்போதைய புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்கள் கடந்த பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர், தனது தட்டாஞ்சாவடி தொகுதி பதவியை அவர் ராஜினாமா செய்ததால் இந்தத் தொகுதி காலியானது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியின் சார்பாக அசோக் ஆனந்த் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். அதே சமயம், எதிர்க்கட்சியான திமுக-வும் தங்களது வேட்பாளரை அறிவித்து இன்றிலிருந்து தேர்தல் பணிகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) நேரடியாகப் போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக, அதன் மாநிலச் செயலாளரான சலீம் அவர்களே வேட்பாளராகப் போட்டியிடுகிறார். புதுச்சேரியில் ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்துத் தனக்கு ஆதரவு தருமாறு சலீம் கோரிக்கை விடுத்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, இன்று அவர் சென்னைக்கு வருகை தந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளரும் தவெக அமைச்சருமான என். ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனக்கும், தங்களது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தவெக முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று கோரி தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்திடம் அதிகாரப்பூர்வமாக ஆதரவு கடிதத்தை வழங்கினார். சமீபத்தில் தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தவெக-வின் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும் வேட்பாளருமான சலீம், தவெக-வின் ஆதரவைக் கேட்டு நேரடியாகக் கடிதம் கொடுத்துள்ளது புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்து வரும் இடதுசாரிகள், புதுச்சேரி இடைத்தேர்தலில் தவெக-வின் பலத்தை நம்பிக் களம் இறங்கியுள்ளனர். தட்டாஞ்சாவடி தொகுதியில் தவெக தங்களுக்குப் பின்பலமாக இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், கூட்டணி பலத்துடன் இந்த இடைத்தேர்தலைச் சந்தித்து ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றும் சலீம் தவெக தலைமையிடம் கோரியுள்ளார்.

சிபிஐ விடுத்துள்ள இந்த அதிகாரப்பூர்வ ஆதரவு கோரிக்கைக்குத் தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஆகியோர் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என்பதால் தட்டாஞ்சாவடி தேர்தல் களம் பயங்கர சூடுபிடித்துள்ளது.

புதுச்சேரி :தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்.. தவெக ஆதரவு கேட்டு சிபிஐ வேட்பாளர் சலீம் கடிதம்!