டெல்லி : இந்திய மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் நடுத்தர குடும்பங்களைக் குறிவைத்து தங்களது தரமான தயாரிப்புகளை வழங்கி வரும் பிகாஸ் (BGauss) நிறுவனம், தனது புதிய மிரட்டலான பிளாக்ஷிப் மாடலாக BGauss C12 MaxR எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் அறிமுக விலை ரூ.1,45,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிகாஸ் நிறுவனத்தின் பழைய மேக்ஸ் சி12 (Max C12) மாடலின் ரெட்ரோ கிளாசிக் டிசைனில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, கூர்மையான கோடுகளுடன் கூடிய மிகவும் மாடர்னான மற்றும் கச்சிதமான குடும்ப வாகனமாக இந்த புதிய ஸ்கூட்டர் பிரேக் செய்யப்பட்டுள்ளது.
என்னென்ன ஸ்பெஷல் இருக்கு?
தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அன்றாட இடவசதியில் இந்த ஸ்கூட்டர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதில் சாவி மூலம் சீட்டைத் திறந்த உடனே, இரண்டு ஹைட்ராலிக் ஸ்ட்ரட்களின் (Hydraulic Struts) உதவியுடன் சீட் தானாகவே மேல்நோக்கிப் பாப்-அப் (Pop-up) ஆகித் திறந்துகொள்ளும். இரவு நேரங்களில் பொருள்களை எடுக்க ஏதுவாக சீட்டுக்கு அடியில் அண்டர்-சீட் லைட் வசதியும் உள்ளது.
முக்கியமாக, உங்களது பணம் மற்றும் நகைகளைப் பாதுகாப்பாக வைக்க சீட்டுக்கு அடியில் கூடுதல் பூட்டுடன் கூடிய ரகசிய ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட் (Hidden Storage), ஒரு சிறிய குடையை வைப்பதற்கான பிரத்தியேக இடம், டூல் கிட் மற்றும் முதலுதவி பெட்டிக்கான தனித்தனி இடவசதிகள் எனப் பிராக்டிகல் ஃபீச்சர்கள் அள்ளி வழங்கப்பட்டுள்ளன.வண்டியின் முன்பக்கத்தில் கம்பீரமான செவ்வக வடிவ எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், ஏப்ரனில் பொருத்தப்பட்ட இண்டிகேட்டர்கள், அகலமான ஃபுளோர்போர்டு மற்றும் பைகள் மாட்ட ஹூக் வசதி உள்ளன.
பின்னாடி அமருபவர்கள் எளிதாகப் பிடித்துக் கொள்ள பெரிய கிராப் ரெயில் மற்றும் இருவர் சௌகரியமாக அமர நீளமான பிளாட் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்பார்க்ளிங் ஒயின் வித் ஷாம்பெயின் கோல்ட், பேர்ல் ஒயிட் மற்றும் செயின்ட் பிளாக் என 4 மாஸ் வண்ணங்களில் இது கிடைக்கிறது.
மிரட்டலான பேட்டரி மைலேஜ்
பிகௌஸ் C12 MaxR ஸ்கூட்டரில் சக்திவாய்ந்த 3.8 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 178 கிலோமீட்டர் வரை அசாத்திய மைலேஜ் (IDC Range) தரும் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. வண்டியில் ஸ்விங்கார்ம்-மவுண்ட்டட் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது, இது 4.2 kW உச்ச திறனை வெளிப்படுத்துகிறது.
இதன் மூலம் வண்டி வெறும் 5.3 நொடிகளிலேயே 0-விலிருந்து 40 கிமீ வேகத்தை எட்டிப்பிடித்துவிடும். இதனுடைய அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கிலோமீட்டர் ஆகும். ஓட்டுபவரின் தேவைக்கேற்ப ஈகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் (Eco, Ride, Sport) என 3 ரைடிங் மோடுகள் மற்றும் டிராஃபிக்கில் வண்டியைப் பின்னாடி எடுக்கத் தனி ரிவர்ஸ் ஸ்விட்ச் வசதியும் இதில் உள்ளது.
சார்ஜிங் நேரம்
சார்ஜிங்கை எளிதாக்க இதன் சார்ஜிங் போர்ட் வண்டியின் முன்பக்க ஏப்ரனிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. வண்டியுடன் வழங்கப்படும் 750 W சார்ஜர் மூலம் 0-விலிருந்து 80 சதவீத பேட்டரியை வெறும் 3 மணி நேரம் 50 நிமிடங்களில் மிக வேகமாக சார்ஜ் செய்துவிடலாம். வண்டி முழுமையாக 100% சார்ஜ் ஆக 5 மணி நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். வாடிக்கையாளர்களின் நீண்ட கால நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் வண்டியின் பேட்டரி, மோட்டார், சார்ஜர் மற்றும் வாகனத்திற்கு ஒட்டுமொத்தமாக 3 ஆண்டுகள் அல்லது 50,000 கிலோமீட்டர் வரை தரநிலையான வாரண்டியை (Standard Warranty) பிகௌஸ் நிறுவனம் வழங்குகிறது.
கார் போன்ற 5-இன்ச் டிஎஃப்டி
தொழில்நுட்பத்தில் கார் போன்ற அனுபவத்தைத் தர இதில் லேட்டஸ்ட் 5-இன்ச் டிஎஃப்டி (TFT) டிஜிட்டல் டிஸ்ப்ளே திரை கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் திரையிலேயே டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மேப், கால் நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் வெவ்வேறான டிஸ்ப்ளே தீம்களை (Themes) மாற்றிக் கொள்ளலாம்.
பாதுகாப்பு வசதிகளாக இதில் பெற்றோர் கட்டுப்பாட்டு லாக் (Parental Lock), செக்யூர் லாக், அவசர கால எஸ்ஓஎஸ் (SOS), சைடு ஸ்டாண்ட் போட்டால் மோட்டார் ஆஃப் ஆகும் வசதி, வண்டி கீழே விழுந்தால் உடனே இன்ஜினை முடக்கும் 'ஃபால்சென்ஸ்' (FallSense) மற்றும் டிஜிலாக்கர் (DigiLocker) இணைப்பு வசதி என அனைத்தும் பக்காவாக நிறைந்துள்ளன. வண்டியின் இருபுறமும் 12-இன்ச் அலாய் வீல்கள், முன்பக்க டெலிஸ்கோபிக் போர்க், முன்பக்க 220 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டிரம் பிரேக் சிஸ்டம் சௌகரியமான பயணத்திற்கு வழிவகுக்கின்றன.
