"என்னை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியே" – செங்கோட்டையன்.!

எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த விவகாரத்தில் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சென்னை :முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், தன்னை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து ஒருங்கிணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், 10 நாட்களுக்குள் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒத்த கருத்துடையவர்களுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ளத் தயார் எனக் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, செங்கோட்டையனை கட்சியின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.

இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “தர்மம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பிரிந்தவர்களை இணைக்க வலியுறுத்தினேன். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் கருத்து கூறினேன். எனது பதவிகளை பறித்ததால் வேதனை இல்லை, மகிழ்ச்சியே” என்று பேட்டியில் கூறியுள்ளார். இது, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் மற்றும் பிளவுகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.