தவெகவில் செங்கோட்டையன்! எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்சன்!

தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது பற்றிய கேள்விக்கு, அவரிடமே கேளுங்கள் என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

eps and sengottaiyan

சென்னை :அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது தமிழக அரசியலில் இன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது . பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற எளிய விழாவில் செங்கோட்டையனும் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் தவெக கொடியை ஏற்று கட்சியில் இணைந்தனர்.

நேற்று சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அவர், அதே நாள் மாலை பட்டினப்பாக்கத்தில் விஜய்யை சுமார் இரண்டு மணி நேரம் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இன்று முறையாக இணைப்பு நிகழ்வு நடைபெற்றது.எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் பயணித்து வந்த செங்கோட்டையன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியதால் எடப்பாடி பழனிச்சாமியுடன் மோதல் ஏற்பட்டது. பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் அவர்களைச் சந்தித்துப் பேசிய சில நாட்களிலேயே கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இதற்கு முன்பு கட்சித் தலைமைக்கு கெடு விதித்து பேசியதும் பழனிச்சாமியை கோபப்படுத்தியிருந்தது .தவெகவில் இணைந்த உடனேயே செங்கோட்டையனுக்கு கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரிடம் த.வெ.கவில் அவர் இணைந்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது அதற்கு செங்கோட்டையன் இணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அவரிடமே கேளுங்கள்” என கோபமாக பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, இழப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஆனால் கொங்கு பகுதியில் அதிமுகவின் அடித்தளம் பலவீனமடைய வாய்ப்பு உள்ளதாகவும், தவெகவுக்கு இது மிக முக்கியமான வெற்றியாக அமைந்திருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்படுகிறது.

தவெகவில் செங்கோட்டையன்! எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்சன்!