புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை – மரங்களின் மாநாட்டில் சீமான்.!

காட்டுக்குள் புலிகள் நுழைந்தவுடன், ஒரு அணில்கூட கண்ணில்படவில்லை என்று மரங்களின் மாநாடில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

NTK Seeman

திருவள்ளூர் :நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு மரங்களோடு பேசுவோம்” என்ற கருப்பொருளில் இன்று மாநாட்டை நடத்தியுள்ளார்.

இந்த மாநாடு தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் செம்மரங்கள் நிறைந்த காட்டில் நடைபெற்றது. “மரங்களோடு பேசுவோம்” என்ற கருப்பொருளில் நடந்த இந்த மாநாட்டில், சீமான் மரங்களின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.

இது தொடர்பாக, பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில் பருவமழை, பெருமழை இல்லை. புயல் மழை மட்டும்தான். புவி வெப்பமாவதுதான் இதற்கு காரணம் பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, ஒருகட்டத்தில் அதை தாங்க முடியாமல் கடல் பொங்கி கொந்தளிக்கும்.

அந்த கொந்தளிப்பில் கடலோர கிராமங்கள் விழுங்கப்படும். ஒரு சுனாமியையே நம்மால் கடந்த காலத்தில் தாங்க முடியவில்லை. இதேநிலை தொடர்ந்தால், பூமி பேரழிவை சந்திக்கும். நான் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு பிறந்தநாளுக்கும், ஒவ்வொரு குழந்தையும் மரம் நடவேண்டும் என சொல்வேன். அதுபோல், பள்ளி மாணவனொருவன் பத்து மரங்கள் நட்டால் அவனுக்கு தேர்வில் 10 மதிப்பெண்கள் வழங்குவேன். 100 மரங்கள் நட்டால் ‘சிறந்த தமிழ் தேசிய குடிமகன்’ என பாராட்டு சான்று வழங்குவேன்.

வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும், 1,000 மரம் நட்டால் அவனது இறுதி சடங்கில் அரசு மரியாதை இருக்கும். மக்கள் மரம் நடுவதற்கு ஊக்கத்தொகை வழங்குவேன். சொந்த வீடாகவே இருந்தாலும் அங்குள்ள மரத்தை வெட்டவேண்டுமென்றால், என்னை கேட்க வேண்டும்.

கிளையை வெட்டினால்கூட, அது சக மனிதனின் கையை வெட்டுவதற்கு சமம் என்பதால், அக்குற்றத்திற்கு 6 மாதம் சிறை தண்டனை கொடுப்பேன். மேலும் விஜய் தாக்கும் வகையில் பேசிய சீமான், ”காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை; அணில்களுக்கும் சேர்த்துதான் மரங்களின் மாநாடு.. நாட்டுக்காக நிற்பவர்களால் தான் மாநாடு நடத்த முடியும்.. ஓட்டுக்காக நிற்பவர்களால் முடியாது” என்றார்.

புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை – மரங்களின் மாநாட்டில் சீமான்.!