"CM விஜய் த்ரிஷாவை கூட துணை முதல்வராக அறிவிப்பார்" RB உதயகுமார் பேச்சு!

எட்டு கோடி தமிழர்களின் உரிமையை நிலைநாட்டிட ஒரு தமிழர் முதலமைச்சர் விஜய்க்கு கிடைக்கவில்லையா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hero Image

சென்னை : 'ஜனநாயகன்' திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நியமனத்திற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஏதோ தமிழ்நாடே தனது அப்பன் வீட்டு சொத்தாகவும், தாத்தா வீட்டு சொத்தாகவும் வந்துவிடுகிறதோ என்று மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் நினைக்கிறாரோ?" என்று மிக ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு மக்கள் கொடுத்த வாய்ப்பை வைத்துக் கொண்டு, அதுவும் பெரும்பான்மை இல்லாத ஒரு மைனாரிட்டி அரசை நடத்திக் கொண்டு, தமிழகத்தின் உரிமைகளைப் பறிபோகச் செய்யும் வகையில் முதல்வர் விஜய் செயல்படுவதாக அவர் சாடியுள்ளார்.

எட்டு கோடி தமிழர்களின் உரிமையை டெல்லியில் நிலைநாட்ட ஒரு தமிழர் கூடவா கிடைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள ஆர்.பி.உதயகுமார், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சினிமா தயாரிப்பாளரை இந்த முக்கிய பதவிக்கு நியமித்தது தவறு எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தவெக அரசு அமைந்தது முதல் முதல்வர் விஜய் தனது நட்பு வட்டாரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருவதாகப் பட்டியலிட்டுள்ளார்.

ராதன் பண்டிட்: ஜாதகம் கணித்துக் கூறும் இவரை அரசியல் ஆலோசகராக நியமித்து, கடும் விமர்சனங்களுக்குப் பின் ரத்து செய்யப்பட்டது.

ஜகதீஷ் பழனிச்சாமி & ஜான் ஆரோக்கியசாமி: மேலாளர் மற்றும் வியூக வகுப்பாளரான இவர்களை அதிகாரப்பூர்வ 'Power Center' ஆக மாற்றியுள்ளனர்.

விஷ்ணு ரெட்டி & வெங்கட நாராயணா: தங்களை வைத்துப் படம் எடுத்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் இருந்தவர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்வதால், உறவுக்கும் நட்புக்கும் இலக்கணமாக இருக்கும் பிரபல திரைப்பட கதாநாயகி த்ரிஷா அவர்களைக் கூட விரைவில் 'துணை முதல்வராக' அவர் அறிவிக்கலாம் என ஆர்.பி.உதயகுமார் அதிரடிக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம் என்ற சூழலில், த்ரிஷா துணை முதல்வராக எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்கிற அதிர்ச்சியில் அன்னை தமிழகமே தற்பொழுது உறைந்து போயிருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது வீடியோ பதிவில் மிகக் காரசாரமாகப் பேசியுள்ளார்.

"CM விஜய் த்ரிஷாவை கூட துணை முதல்வராக அறிவிப்பார்" RB உதயகுமார் பேச்சு!