அமைச்சர் புறக்கணிப்பு... மாணவர்கள் போராட்டம்... நெல்லை பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது?

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிகழ்ச்சி வரிசை தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், உயர்கல்வி அமைச்சர் விழாவைப் புறக்கணித்தார்.

Hero Image

நெல்லை : மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்வேறு சர்ச்சைகளும் எதிர்பாராத திருப்பங்களும் அரங்கேறின. விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக வந்தே மாதரத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விழாவைப் புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் தொடக்கத்தில் பாடப்பட வேண்டிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதாகவும், ஆளுநரின் அறிவுறுத்தலின்படியே வந்தே மாதரத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டதாகவும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உறுதிப்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாயின. இதற்குத் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், விழாவில் கலந்துகொள்ள வந்த உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விழாவைப் புறக்கணித்து வெளியேறினார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. விழாவில் ஆளுநர் கலந்துகொண்ட நிலையில், தங்கப் பதக்கம் பெற்ற 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் மூலமாகப் பட்டம் வழங்கப்படும் என்றும், மற்ற மாணவர்களுக்கு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்குப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வந்த மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

பல ஆண்டுகளாகக் கடின உழைப்பைக் கொட்டி, ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி, தொலைதூரப் பகுதிகளில் இருந்தெல்லாம் வந்துள்ள தங்களுக்கு ஆளுநர் கையால் பட்டம் வழங்காமல் காலம் தாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதுகுறித்து மாணவர் ஒருவர் ஊடகங்களிடம் பேசுகையில், "நாங்கள் 4 முதல் 8 ஆண்டுகள் வரை கள ஆய்வு (field work) செய்து, இரவு பகலாகக் கஷ்டப்பட்டு இந்த PhD பட்டங்களைப் பெறுகிறோம். இது சாதாரண UG அல்லது PG போன்றது அல்ல. ஆளுநரிடம் பட்டம் பெற வேண்டும் என்பதற்காகவே ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, வட மாநிலங்களில் இருந்தெல்லாம் வந்துள்ளோம். திடீரென கடைசி நேரத்தில் வந்து ஆளுநர் பட்டமளிக்க மாட்டார், விருந்தினர்கள் தருவார்கள் என்று விதிகளை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கு கவுன் (gown) எதற்கு வழங்கப்பட்டது? பணமில்லை, எங்களுக்கு ஆளுநரிடம் இருந்து முறையான முறையில் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது ஒற்றைக் கோரிக்கை" என்று கண்ணீருடன் தமது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

மாணவர்கள் தொடர்ந்து கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை செயலாளர் உடனடியாகத் தலையிட்டு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விழாவில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் ஆளுநரே நேரடியாகப் பட்டங்களை வழங்குவார் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஆளுநர் பங்கேற்ற விழாவில்Protocol எனப்படும் வழிமுறை மாற்றங்கள் மற்றும் மாணவர்களின் திடீர் கொந்தளிப்பால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா பெரும் பரபரப்புக்குள்ளானது.