அமுதன் கொலை வழக்கில் முக்கிய விளக்கம்! பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் சொன்னது என்ன?

தமிழக சட்டப்பேரவையில் கொலைச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Hero Image

சென்னை : நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஒருவாரத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் எழுப்பிய கேள்விகளும், அதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களும் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டுகள்

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை வரிசையாகப் பட்டியலிட்டுப் பேசினார். கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் கொல்லப்பட்ட சம்பவம், சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவன் தனுஷ் கொலை, மற்றும் சென்னை அம்பத்தூரில் ஆட்டோவுக்குள் பெண் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

அமுதன் மரணத்திற்கு காவல்துறையே காரணம்: கோவை செட்டிப்பாளையம் காவல்துறையினர் மாணவன் அமுதனை விசாரணைக்கு அழைத்து, போதை கும்பல் குறித்த ரகசியத் தகவல்களைப் பெற்றுள்ளனர். காவல்துறை அந்தத் தகவலைக் கொண்டு நியாயமாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும். மாறாக, அமுதன் கொடுத்த தகவல்களைக் குற்றவாளிகளிடமே காவல்துறையினர் போட்டுக்கொடுத்துள்ளனர். இதுவே மாணவன் அமுதன் கொல்லப்பட்டதற்குக் காரணமாக அமைந்தது என அவர் குற்றம் சாட்டினார்.

இது கோஷ்டி மோதல் அல்ல, படுகொலை: ஒரே ஒரு மாணவனை 20 பேர் சேர்ந்து அடித்துக் கொன்றிருப்பது சாதாரண கோஷ்டி மோதல் அல்ல. திட்டமிடப்பட்ட ஒரு படுகொலை. அரசின் மெத்தனப்போக்காலும், காவல்துறையின் பொறுப்பற்ற நடவடிக்கையாலும்தான் மாணவன் அமுதன் பலியாகியுள்ளார். குற்றவாளிகளுக்குத் தகவல் கசியவிட்டதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேரவையில் விளக்கம் அளித்தார். கோவை மாணவர் கொலை வழக்கில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார். இது குறித்து பேசிய அவர் "கோவை மாணவன் அமுதன் கொலைக்கும் போதைப்பொருள் விவகாரத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், விசாரணையில் அந்த மாணவன் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவரவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் " இது இரண்டு வெவ்வேறு பிரிவு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையினால்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்க வேண்டிய எந்தத் அவசியமும் தமிழக காவல்துறைக்குக் கிடையாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்தவுடன் காவல்துறை எந்தவிதத் தாமதமும் இமின்றி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் உடனடியாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது. மேலும், இந்த வழக்கைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து, அடுத்த மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை (Charge sheet) தாக்கல் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதே சமயம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதில் அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் பேரவையில் தெரிவித்தார்.