சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரையில் உள்ள பாரபத்தி கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலினை “அங்கிள்” என்று குறிப்பிட்டு, “திமுக ஆட்சியில் நேர்மை இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு இல்லை,” என குற்றம்சாட்டினார்.
மேலும், திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் குறிப்பிட்டு, மறைமுகமாக அதிமுகவையும் விமர்சித்தார். விஜயகாந்தை “என் அண்ணன்” என உருக்கமாக குறிப்பிட்டு, அவரது பங்களிப்பைப் போற்றினார்.விஜய்யின் இந்தப் பேச்சு, திமுகவை மையப்படுத்திய கடுமையான விமர்சனங்களால் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. “மாநிலத்தில் முதலமைச்சர் ஒருவர் இருக்கிறாரா, இல்லையா?” என்று விஜய் கேள்வி எழுப்பியதுடன், திமுக ஆட்சியில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தலைவிரித்தாடுவதாகவும் கூறினார்.
இதனையடுத்து, திமுகவை சேர்ந்தவர்கள் விஜயின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பேசி வருகிறார்கள். அந்த வகையில், திமுக அமைச்சரும், கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ” ஒரு இயக்கத்தின் தலைவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் எவ்வளவு பட்டு இந்த இடத்தில் நிற்கிறார் என்று தெரியும்.அப்படிப்பட்ட ஒருவரை அப்படி பேசுவது உக்கார்ந்ததா? புதுசா அவர் எங்கிருந்தும் வரவில்லை கலைஞருடன் பழகிய குடும்பம் தான்…முதல்வருடன் பழகிய குடும்பம் தான் மாண்புமிகு துணைமுதல்வருடன் நண்பராக பழகிய குடும்பம் தான்.
ஆனால், இன்றைக்கு நாமளும் ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டோம் என்பதற்காக இது போன்று பேசக்கூடாது அப்படி பேசுவது ஏற்கதக்கதா இல்லையா என்பதை அவருடைய தொண்டர்களும், அவரும் புரிந்து கொள்ளவேண்டும். முதல் மாநாட்டில் ‘நம்மை பார்த்து விசிலடிச்சான் குஞ்சுகள்’ என்று மற்றவர்கள் சொல்லிவிடக் கூடாது, நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விஜய் கூறினார். அவரது தொண்டர்கள் இப்போது முதிர்ச்சி ஆகி விட்டனர். ஆனால் 2-வது மாநாட்டில் விஜய் தான் விசிலடிச்சான் குஞ்சுகள் போல் பேசிவிட்டார் என தோன்றுகிறது” என கூறியுள்ளார்.
