சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் (அக்டோபர் 15, 2025) விவாதங்கள் தீவிரமடைந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அரசின் பொறுப்பின்மையை விமர்சித்து, அவையை விட்டு வெளியேறிய ஈபிஎஸ், வெளியே செய்தியாளர்களிடம் “த.வெ.க. கூட்டத்தை டிவியில் பார்த்தேன். 500 போலீஸாரெல்லாம் அங்கே தெரியவில்லை” என்று கடுமையாகக் கூறினார்.
மேலும், ADGP 500 காவலர்கள், முதல்வர் 600 என்று கூறினாலும், டிவி காட்டியதில் அது தெரியவில்லை என்று அவர் சந்தேகம் தெரிவித்தார். இது, அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. அவையில் கரூர் சம்பவத்தைப் பற்றி பேச அனுமதி இல்லை என்று ஈபிஎஸ் விமர்சித்தார். “நாங்கள் கருத்து கூறிய பிறகு முதல்வர் பதிலளிக்க வேண்டும் என கேட்டோம். உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம். தவெக தலைவர் முந்தைய 4 மாவட்டங்களில் சந்திப்புகள் நடத்தியதை உளவுத்துறை அறிந்திருந்தால், ஏன் முன்னெச்சரிக்கை இல்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
வேலுச்சாமிபுரத்தில் ஜனவரி மாதம் அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு, நீதிமன்றத்துக்கு சென்ற பிறகே அனுமதி கிடைத்ததை நினைவூட்டிய ஈபிஎஸ், “அதே இடத்தை தவெகவுக்கு ஏன் கொடுத்தது? அசம்பாவிதம் நடக்க வேண்டும் என திட்டமிட்டு கொடுத்ததாக மக்கள் சந்தேகிக்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார். “இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கட்சிக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இல்லை. உங்கள் ஆட்சியில் இது நடந்தது” என்று அவர் சாடினார்.
ஒரு நபர் ஆணையத்தை அவசரமாக அமைத்தது குறித்தும் ஈபிஎஸ் கேள்வி எழுப்பினார். “அவசர அவசரமாக ஒரு நபர் ஆணையத்தை எப்படி அமைக்க முடியும்? உடற்கூறு ஆய்வு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மையை மறைக்க அரசு நினைக்கிறது. ஆணையத்துக்கு உதவி இல்லை” என்று அவர் கூறினார். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் உயிரிழப்புகளில் முதல்வர் நேரில் செல்லாததைச் சுட்டிக்காட்டி, “அப்பாவி மக்கள் இறந்த கரூரை ஏன் புறக்கணித்தீர்கள்?” என்று கேட்டார். “நாங்கள் அரசியல் செய்யவில்லை, மக்களுக்காகப் பேசுகிறோம். கரூர் பற்றி பேசினால் ஆளும் கட்சிக்கு ஏன் பதற்றம்?” என்று இபிஎஸ்
தவெக தலைவர் 10 நிமிடம் பேசியபோது செருப்பு வீச்சு நடந்ததைச் சொல்லி, “சட்டமன்றத்தில் பேசினால் நீக்கிவிடுவார்கள், அதனால் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். அவையில் விவாதம் தீவிரமடைந்ததும், அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா போட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்களின் பேச்சுக்கு எதிராக வெளிநடப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
