முதலீடு ஈர்க்கவா? குடும்ப முதலீடு செய்யவா? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது குடும்ப முதலீடு செய்யவா? மக்களின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிப்பாரா

MK Stalin -DMK

சென்னை :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொண்டார். இதற்கு முன், அவர் துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து 10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.

இந்த வெளிநாட்டுப் பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர், ஸ்டாலின் மக்கள் பிரச்சினைகளை உணராமல், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும், மாநிலத்தின் நலனுக்காக அல்லாமல் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகவே இத்தகைய பயணங்களை மேற்கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது குடும்ப முதலீடு செய்யவா? ஆட்சி முடிவடைய இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம். மக்களின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஆரம்பம் முதல் ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு வெள்ளை அறிக்கையை பற்றி மூச்சுவிடவில்லை.

நான் முதலமைச்சராக இருந்தபோது, 2019-ம் ஆண்டு ஒரு முறை மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 41 ஆகும். கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஆனால் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தைப் பற்றிய செய்தி அறிந்தவுடன், திரைப்படத் துறையில் மறைந்த ‘சின்ன கலைவாணர்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட திரு. விவேக் அவர்களது நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது. இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது செய்துள்ளேனா? என்று விவேக் அவரின் அடிபொடிகளிடம் கேட்பார் ‘ஒன்றுமே இல்லை’ என்று அவர்கள் பதில் அளிப்பார்கள் உடனே விவேக் அதுதான் மக்களுக்கும் என்பார்.

அதுபோல் ஸ்டாலின் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். சொல்லும்படியாக ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா? இந்த முறை அதைத் தவிர்த்து தமிழகத்திற்குத் தேவையான முதலீட்டை ஈர்க்க வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலீடு ஈர்க்கவா? குடும்ப முதலீடு செய்யவா? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!