சென்னை :கரூரில் செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக துயரமான விபத்து நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 39 முதல் 41 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”’கரூரில் நடந்தது பெரும் துயரம்; இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக் கூடாத துயரம் சமூக வலைதளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
கரூர் மருத்துவமனையில் நான் கண்ட காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அப்பாவி மக்கள், தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள். உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நம் தமிழ் உறவுகள், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான கருத்துகளை பரப்புவதை தவிருங்கள்.
அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு என தனியாக இனி விதிகள் வகுக்கப்படும். அனைவரும் மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டும். தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது.
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு, அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, கூட்ட நெரிசல்களை தவிர்க்க விதிகள் மற்றும் நெறிமுறைகள் வகுக்கப்படும் என உறுதியளிக்கிறேன், அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன்.
மனித உயிர்களே மேலானது, மானுடப்பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் மற்றும் கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகை என அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு எல்லோரும் மக்களுடைய நலனுக்காக சிந்தியுங்கள். இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பது நம் அனைவரது கடமை.
