சென்னை : மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான தவெக இணைப்பு விழாவில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைத்துக்கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக-வின் கூட்டணி முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், தளபதி விஜய்யை 'நிரந்தர முதல்வர்' எனப் புகழ்ந்து தள்ளினார்.
விழாவில் பேசிய செங்கோட்டையன், "துரோகம் எங்கே நடைபெற்றது என்பதைப் பார்க்க வேண்டும். திமுக-வுடன் இணைந்து முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றலாம் என்று எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார். ஆனால், அந்த நரித்தனமான கனவைத் தகர்த்தெறியும் சக்தியாகவே அதிமுக-விலிருந்து விலகி எம்.எல்.ஏ-க்களும், முன்னாள் அமைச்சர்களும் தவெக-வில் இணைந்துள்ளனர்.
இவர்கள் பதவி ஆசைக்காக இங்கே வரவில்லை, நாட்டு மக்கள் மற்றும் நாட்டைத் தலைவன் விஜய் மட்டுமே காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடுதான் வந்திருக்கிறார்கள்" என்று ஆவேசமாகப் பேசினார்.
அதிமுக-வின் அடையாளங்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளைச் சுமந்து நிற்பவன் தான் என்று கூறிய செங்கோட்டையன், தவெக தலைவர் தளபதி விஜய்யின் பெருந்தன்மையை வெளிப்படுத்தினார். "என்னை அழைத்த தவெக தலைவர் தளபதி விஜய், 'நீங்கள் தாராளமாக அம்மா படத்தை வைத்துக்கொள்ளுங்கள், அது எனக்கு மகிழ்ச்சியே' என்று சொன்னார்.
புனிதமான புரட்சித் தலைவி அம்மாவுடைய வழியில் நிற்பவர்களுக்கு இங்கேதான் மரியாதை இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் தவெக அரசு தடுமாறுமா என்று நரி போலக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சாடிய அவர், "நிச்சயமாக அந்த ஆட்சி தடுமாறாது. தவெக-வில் இணைந்திருக்கும் இந்தச் சக்திகள் அந்த ஆட்சியைத் தலைநிமிரச் செய்யும். தளபதி விஜய் இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் தான்" என்று தனது பேச்சை முடித்தார். அதிமுக-வின் முக்கியத் தலைவர்கள் தவெக-வில் இணைந்துள்ள இந்தச் சம்பவம், தமிழக அரசியலில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
