கேப்டன்சி தோல்வி, வெளியேறத் தயார்! பிசிசிஐ மையத்தையே வீடாக்கிய பாண்டியா?

சிஎஸ்கே (CSK), கேகேஆர் (KKR) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 7 அணிகள் பாண்டியவை தங்கள் அணியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் சிஎஸ்கே முன்னணியில் உள்ளது.

Hero Image

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது விளையாட்டு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவர், அணியின் தொடர் தோல்விகளுக்குப் பிறகு அந்த அணியிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்டியாவின் தலைமையில், அந்த அணி 10-வது, 3-வது மற்றும் 9-வது இடங்களைப் பிடித்தது. இந்த மோசமான செயல்பாடுகளால், அவரை அணியிலிருந்து விடுவிக்க அல்லது பரிமாற்றம் செய்ய மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இவரைத் தங்கள் அணியில் இணைக்க சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய ஏழு அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரைத் தங்கள் அணியில் இணைக்க முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் மட்டுமே ஹர்திக் பாண்டியாவை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ஹர்திக் பாண்டியா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். மும்பையிலிருந்து நிரந்தரமாக பெங்களூருவுக்கு அவர் குடியேறியுள்ளார். பிசிசிஐ (BCCI)-ன் 'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' (COE) மையத்தை, தனது எஞ்சிய கால கிரிக்கெட் வாழ்க்கையின் முதன்மைப் பயிற்சித் தளமாக மாற்ற அவர் முடிவு செய்துள்ளார்.

பொதுவாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் காயம் குணமடையும் காலங்களிலும் அல்லது தேசிய முகாம்களின் போதும் மட்டுமே இந்த மையத்தைப் பயன்படுத்துவார்கள். ஆனால், ஹர்திக் பாண்டியா ஒரு முழுநேரப் பயிற்சித் தளமாக இதை மாற்றியமைத்த முதல் இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை லோயர் பேரல் பகுதியில் தனது வசிப்பிடத்திலிருந்து தினசரி பயிற்சிக்காகப் பயணம் செய்வது கடினமாக இருந்ததால், பெங்களூருவில் உள்ள பயிற்சி மையத்திற்கு அருகில் அவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இங்கிலாந்து தொடரிலிருந்து விலகி இருக்கும் அவர், தனது உடல் தகுதியை முழுமையாக மீட்டெடுத்து, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை இன்னும் சில ஆண்டுகள் நீட்டிக்க இந்த முயற்சி அவருக்கு உதவும் என நம்புகிறார்.