கார் மீது தாக்குதல்.."என்னை கொலை செய்ய முயற்சி" – பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏ. அருள் பயணித்த காரை வழிமறித்து சிலர் தாக்கியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

pmk arul

சேலம் :மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்று கொண்டிருந்த கார் மீது கொலை முயற்சி போன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. வடுகநத்தம்பட்டியில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும் வழியில், அன்புமணி ராமதாஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான கும்பல் காரை நடுவழியில் மறித்து சரமாரியாகத் தாக்கியது. காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, உடன் சென்றவர்களும் தாக்கப்பட்டனர்.

அருள் உயிர் தப்பி வந்தார்.பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளராக செயல்பட்டு வரும் எம்எல்ஏ அருள், தாக்குதலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம், “எங்களை கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்தினர். அன்புமணியின் டீசன்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் இதுதானா?” என்று கேள்வி எழுப்பினார். ராமதாஸ் – அன்புமணி இடையேயான உள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அன்புமணி ஆதரவு நிர்வாகிகள், அருள் அன்புமணி மீது தொடர்ந்து வெறுப்பு கருத்துக்கள் பேசி வருவதால் தாக்குதல் ஏற்பட்டதாக கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, அருளுக்கு பாதுகாப்பு அளித்து விசாரணை தொடங்கினர். காரில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அருள் தனது பாதுகாப்புக்கு அச்சம் தெரிவித்து, கட்சி ஒழுங்கு நடவடிக்கை கோரியுள்ளார். போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கட்சி ஒற்றுமைக்கு இது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

கார் மீது தாக்குதல்.."என்னை கொலை செய்ய முயற்சி" – பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு!