கட்சி பேதம் இன்றி தமிழக எம்.பி.க்கள் அனைவரும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் – இ.பி.எஸ்...!

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

CPRadhakrishnan -EdappadiPalanisamy

சென்னை :தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு நேற்றைய தினம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவால் வெளியிடப்பட்டது.  இவர் தற்போது மகாராஷ்டிர ஆளுநராகவும், முன்னர் ஜார்க்கண்ட், தெலங்கானா, மற்றும் புதுச்சேரி ஆளுநராகவும் பணியாற்றியவர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கட்சி பேதமின்றி தமிழக எம்.பி.க்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி கே பழனிசாமி, ”தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” என திமுக கூட்டணியிடம் ஆதரவு கோரிக்கை வைத்தார்.

முன்னதாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடம்” என்று குறிப்பிட்டிருந்தார்,

unknown node