நெல்லை :நவம்பர் 27: தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது குறித்து தெளிவாக விளக்கமளித்தார். “செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. இது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மட்டுமே. அதைப் பற்றி நாங்கள் கருத்து கூறுவது சரியாக இருக்காது” என்று அவர் தெரிவித்தார்.
சிலர் “செங்கோட்டையனை பாஜக இயக்குகிறது” என்று பேசுவதை மறுத்த நயினார், “அப்படி இருந்தால் அவர் ஏன் தவெகவுக்குப் போக வேண்டும்? எங்களோடு இருந்திருக்கலாமே?” என்று கேள்வி எழுப்பினார். அதேநேரம் விஜய்யை “தம்பி விஜய்” என்று அழைத்து, “அவர் இப்போதுதான் கட்சி தொடங்கியிருக்கிறார். லாங் ஜம்ப், ஹை ஜம்ப் தாண்டி உடனே முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார். எம்.ஜி.ஆர் கூட நடிகராக இருந்தபோதே கட்சிப் பணி செய்து, பின்னரே கட்சி தொடங்கி முதல்வரானார். இது சாத்தியம் இல்லை” என்று கிண்டலாக தெரிவித்தார்.
தனது டெல்லி பயணம் குறித்தும் பேசிய நயினார் நாகேந்திரன், “நான் டெல்லி சென்றது சொந்த வேலைக்காக மட்டுமே. கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்கோ அரசியல் உள்நோக்கத்துக்கோ செல்லவில்லை” என்று தெளிவுபடுத்தினார். மேலும், “அதிமுக ஒரு பெரிய கட்சி, தனக்கென தனி வாக்கு வங்கி உள்ளது. செங்கோட்டையன் போன்றோரின் நகர்வு எங்கள் கூட்டணியை பாதிக்காது” என்று உறுதியாகக் கூறினார்.
திமுக அரசை விமர்சித்த அவர், “இந்தாண்டு பொங்கலுக்கு பொதுமக்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும். முதல்வர் அதைச் செய்வார் என்று நம்புகிறேன். எனது தொகுதிக்கு பல திட்டங்களை முதல்வர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்” என்றும் குறிப்பிட்டார். ஒட்டுமொத்தமாக, செங்கோட்டையன் இணைப்பை பாஜக சாதாரண நிகழ்வாகவே கருதுவதாகவும், அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாக இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
