வெளிநாடு பயணம்: "இதுவரை 922 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன" – மு.க ஸ்டாலின்.!

இங்கிலாந்தின் Oxford பல்கலைக்கழகத்தில் செப்.4 ஆம் நாள் தந்தை பெரியார் திருவுருவப் படத்தை திறந்து வைக்க இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin - Foreign Visit

சென்னை :தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30, 2025) ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார பயணத்தை மேற்கொண்டார். இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்பட்ட அவர், நாளை (ஆகஸ்ட் 31) ஜெர்மனியில் ‘ஐரோப்பாவில் மாபெரும் தமிழ் கனவு – 2025’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழர்களை சந்திக்கவுள்ளார்.

செப்டம்பர் 1 அன்று ஜெர்மனியில் இருந்து லண்டன் செல்லும் முதலமைச்சர், செப்டம்பர் 2 அன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணத்திற்கு முன்னர், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது, அவர் தனது பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது மற்றும் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவது ஆகியவை தனது முக்கிய குறிக்கோள்கள் என கூறினார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ”ஒரு வார பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொள்கிறேன். தமிழ்நாடு நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 32,81,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன.அமெரிக்கப் பயணத்தின் போது 19 ஒப்பந்தங்கள், ஸ்பெயின் பயணத்தில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வெளிநாடு பயணத்தில் நான் கையெழுத்திட்ட அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்கும் அற்புதமான நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும், பெரியார் MOOC படத்தை திறந்து வைப்பது உள்ளிட்ட பயணத்தின் அனைத்து அம்சங்களையும் அவர் விளக்கினார். மேலும் இந்த பயணத்தின் மூலம், 2022 துபாய் பயணத்தில் ரூ.6,100 கோடி முதலீடு ஈர்த்தது போல, இம்முறையும் குறிப்பிடத்தக்க முதலீடுகளை பெறுவதற்கு முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.