“நளினியை சிறையில் சந்தித்த பிரியங்கா.,” ராகுல் உருக்கம்.! உண்மை இதுதானா.?
எனது தந்தை படுகொலையில் சிறையில் இருந்த நளினியை எனது பிரியங்கா நேரில் சந்தித்த பிறகு எனது சகோதரி அன்பானவளாக மாறிவிட்டாள் என ராகுல் காந்தி பேசினார்.
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி என இருவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு தொகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இருந்த நளினியை சந்தித்து பேசியது பற்றி உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் பேசுகையில், ” தற்போது எங்கள் முதல் பணி அரசியல் சாசன சட்டத்தை பாதுகாப்பது தான்.” என்று கூறி, ” எனது தந்தை படுகொலையில் சிறையில் இருந்த நளினியை எனது சகோதரி பிரியங்கா நேரில் சந்தித்து கட்டியணைத்து விட்டு வந்தார். அந்த சந்திப்புக்கு பிறகு எனது சகோதரிஅன்பானவளாகவும், உணர்ச்சிவசமிக்கவளாகவும் மாறிவிட்டாள். நாங்கள் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கவில்லை. அன்போடும் அரவணைப்போடும் கொண்ட அரசியலை முன்னெடுத்து வருகிறோம். அன்பான ஒரு சகோதரியை நான் கொண்டதால் நான் அதிர்ஷ்டசாலி ” எனப் பேசினார்.
இதுகுறித்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ” 33 ஆண்டுகள் கழித்தும் இன்னும் ராஜீவ் காந்தி கொலையை வைத்து காங்கிரஸ் ஆதாயம் தேடுகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து நான் கூறிய தகவல்களை கேட்டு பிரியங்கா காந்தி கோபத்திற்கு சென்றதாக, நளினி பதிவு செய்துள்ளார். பிரியங்காவின் கோபம் தனக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியதாகவும், பிரியங்காவின் அப்போதைய சந்திப்பு அரசியல் ஆதாயம் கொண்டது என்றும் நளினி, மூத்த பத்திரிகையாளர் ஏகலைவன் தொகுத்த, யாழ் பதிப்பகம் வெளியிட்ட ராஜீவ் காந்தி கொலை மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.” என விமர்சனம் செய்துள்ளார்.