கர்நாடகா :பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவையையும், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர், பெங்களூரு ஆர்.வி.ரோடு நிலையம் முதல் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது, ராகிகுட்டாவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.
இதனை தொடர்ந்து, ரயிலின் உள்ளே சென்று பார்வையிட்ட மோடி, ரயிலில் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடினார். குறிப்பாக, 19.15 கி.மீ தூரத்திற்கு இயக்கப்படும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை மூலம், 5 லட்சம் பயணிகள் பயன்பெறுவார்கள்.
இதனால், போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த சேவை மஞ்சள் வழித்தடத்தில் ஆர்.வி. சாலை முதல் பொம்மசந்திரா வரை 19 கி.மீ. தூரம் கொண்டது, 16 நிலையங்களுடன், சுமார் 7,160 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தானியங்கி ரயில்கள் கணினி அடிப்படையிலான தகவல் தொடர்பு முறை (CBTC) மூலம் இயக்கப்படுகின்றன, இது பாதுகாப்பான இயக்கத்தையும் விபத்து தவிர்ப்பையும் உறுதி செய்கிறது.
இதனால் பெங்களூரு மெட்ரோ நெட்வொர்க் 96 கி.மீ.க்கு மேல் விரிவடைந்து, தினசரி 25 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 15,610 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ 3-ம் கட்ட திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார், இது 44 கி.மீ. தூரத்திற்கு 31 உயர்நிலை நிலையங்களை உள்ளடக்கும்.
