டெல்லி :நவராத்திரி பண்டிகைக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பு செய்யப்படும் என அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அவரது உரையில், அவர் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து பேசினார், சீர்திருத்தம் செய்யப்பட்ட புதிய ஜிஎஸ்டி நாளை முதல் அமலுக்கு வருவதால் பல பொருள்களின் விலை குறையவுள்ளது.
அதன்படி, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் 99% பொருட்களுக்கு பயனளிக்கும் என்றும், அவை இப்போது 5% வரி அடுக்கின் கீழ் வருகின்றன என்றும் பிரதமர் கூறினார். 5% மற்றும் 18% அடுக்குகளைக் கொண்டிருப்பது மட்டுமே பொதுவான பொருட்களை மலிவாகப் பெற உதவும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாளையில் இருந்து 2 ஜி.எஸ்.டி வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். ஒரே நாடு ஒரே வரி என்ற குறிக்கோளை ஜி.எஸ்.டி சீர்திருத்தம் நிறைவேற்றும். ஜி.எஸ்.டி சீர்திருத்தத்தால் நடுத்தர மக்களும், இளைஞர்களும் அதிகளவில் பயன்பெறுவர். ஜி.எஸ்.டி வரி குறைப்பால் நாட்டு மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இந்த மாற்றங்கள் விலைகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், தொழில்துறை முதல் விவசாயம் மற்றும் சேவைகள் வரை அனைத்து துறைகளிலும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். மேலும், இந்த மாற்றங்களால் ஏழைகளும், புதிய நடுத்தர வர்க்கத்தினரும் இரட்டை நன்மைகளைப் பெறுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
ஒரு காலத்தில் 12 சதவீத வரி விதிக்கப்பட்ட பொருட்களில் கிட்டத்தட்ட 99 சதவீத பொருட்கள் இப்போது 5 சதவீத வரி வரம்பிற்குள் வரும், அதே நேரத்தில் 28 சதவீத வரி வரம்பில் இருந்த பொருட்களில் சுமார் 90 சதவீத பொருட்கள் 18 சதவீதமாகக் குறையும். இருப்பினும், ஆடம்பர மற்றும் பாவப் பொருட்களுக்கு 40 சதவீத இழப்பீட்டு வரி தொடர்ந்து பொருந்தும்” என்று கூறினார்.
