டெல்லி :மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பான் மசாலா, சிகரெட், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் (sin goods) மீது 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி விகிதம், இந்த பொருட்களின் சில்லறை விற்பனை விலையை அடிப்படையாகக் கொண்டு விதிக்கப்படும், முன்பு பயன்படுத்தப்பட்ட தொகை மதிப்பு அடிப்படையில் அல்ல. இருப்பினும், இந்த 40% வரி விகிதம் உடனடியாக அமலுக்கு வராது.
மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக எடுக்கப்பட்ட கடன்கள் முழுமையாக செலுத்தப்படும் வரை, தற்போதைய 28% ஜிஎஸ்டி விகிதமும், கூடுதலாக இழப்பீட்டு செஸ்ஸும் தொடரும். இந்த கடன் தீர்ப்பு இந்த நிதியாண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவு, புகையிலை பொருட்களின் நுகர்வைக் குறைப்பதற்கும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வருவாயை அதிகரிப்பதற்கும் எடுக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், இந்த பொருட்களுக்கு மீதான வரி முறை மாற்றத்தால், இவற்றின் விலை 5-6% உயர வாய்ப்புள்ளதாக தொழில் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி, விமர்சனம் செய்துள்ளன. ஆனால், நிர்மலா சீதாராமன், இதுபோன்ற கேடு பொருட்களுக்கு குறைந்த வரி விதிக்க வேண்டுமா என்று எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த புதிய வரிவிதிப்பிற்கு இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இந்த மாற்றங்கள் வரும் 22-ம் தேதி அமலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
