குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், சுமார் 2.39 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான (இரண்டாம் கட்டம்) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 மாவட்டங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட 61 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 2.51 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத்தில் சபர்மதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கை செலுத்தினார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் நிலையில், பல்வேறு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வங்கிகளை செலுத்தி வருகின்றனர்.