"ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கும் அமெரிக்க வரி விதிப்புக்கும் தொடர்பு இல்லை" – நிர்மலா சீதாராமன்.!

56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின், ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கும் அமெரிக்க வரி விதிப்புக்கும் தொடர்பு இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.

Nirmala Sitharaman - trump

டெல்லி :டெல்லியில் நேற்றைய தினம், மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், 7 தூண்களை வகுத்துள்ளது.

ஜிஎஸ்டி வரியில் 12% மற்றும் 28% வரம்புகளை நீக்கி, இனி 5%, 18% வரம்புகள் மட்டுமே தொடரும் என்றும், சிறப்பு வரி விதிப்பாக 40% வரம்பு அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்த  புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை செப்.22ஆம் தேதி முதல் அமலாகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

குறிப்பாக, இந்தியாவின் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) சீர்திருத்தங்களுக்கும் அமெரிக்காவின் வரி விதிப்பு முறைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது, இரு நாடுகளின் வரி கொள்கைகள் தனித்தன்மையுடன் செயல்படுவதையும், இந்தியாவின் ஜிஎஸ்டி முறை உள்நாட்டு பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதையும் குறிக்கிறது.

இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ”அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்த முடிவுக்கும் தொடர்பு இல்லை. இது குறித்து கடந்த 18 மாதங்களாக நாங்கள் ஆலோசித்து வந்தோம். டிரம்ப் விதித்துள்ள 50% வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும். விரைவில் நல்ல செய்தி வரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.