நீங்க எல்லாரும் என்னை வில்லனாக்கிட்டீங்க...முகமது ஷமி வேதனை!

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் எல்லாவற்றையும் திரிச்சுப் போடுகிறது என முகமது ஷமி வேதனையுடன் பேசியுள்ளார்.

Mohammed Shami

டெல்லி :இந்தியாவின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது தேர்வு இல்லாமை குறித்து எழுந்த சர்ச்சை மற்றும் தேர்வு கமிட்டி தலைவர் அஜித் அகர்கருக்கு எதிரான கருத்துகளுக்கு பதிலளித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தன்னை தேர்வு செய்யாததால் ஏற்பட்ட விவாதத்தில், முகமது ஷமி சமூக ஊடகங்களில் வார்த்தைகள் திரிந்து போகும் என்று கூறி, தனது கவனம் மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதிலேயே இருப்பதாக உறுதிப்படுத்தினார்.

இந்த சர்ச்சை, முகமது ஷமியின் உடற்தகுதி குறித்து அகர்கரின் கருத்துகளால் தீவிரமடைந்தது, முகமது ஷமி தனது ராஞ்சி டிராஃபி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அதை மறுத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அக்டோபர் 28 அன்று நடைபெற்ற ராஞ்சி டிராஃபி போட்டியில், பெங்கால் 141 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. இதில் முகமது ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். முதல் இன்னிங்ஸில் 3-44, இரண்டாவது இன்னிங்ஸில் 5-38 என்ற பந்துவீச்சால் அவர் சிறந்து விளங்கினார்.

327 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குஜராத்து அணி 45.5 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த சிறப்பான செயல்திறன், முகமது ஷமியின் உடற்தகுதி குறித்த விமர்சனங்களுக்கு பதிலாக அமைந்தது. போட்டிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சர்ச்சை குறித்த கேள்விக்கு சாமி சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

இது குறித்து பேசிய அவர் “இந்தக் கேள்வி வரும் என்று அறிந்திருந்தேன். நான் எப்போதும் சர்ச்சையில் இருக்கிறேன். நீங்கள் என்னை ஏற்கனவே வில்லன் ஆக்கிவிட்டீர்கள்! இன்றைய உலகில் சமூக ஊடகங்கள் எல்லாவற்றையும் திரிச்சு சொல்கின்றன. என் வேலை சிறப்பாக செயல்படுவது. வாய்ப்பு கிடைக்கும்போது சிறப்பாக செய்வேன். மீதியை இறைவன் மீது விட்டுவிடுகிறேன். பெங்கால் என் சொந்த மண். இங்கு விளையாடும் ஒவ்வொரு போட்டியும் எனக்கு நினைவாகும்” என்று அவர் உருக்கமாகக் கூறினார்.

மேலும், போட்டியில் பயன்படுத்தப்பட்ட பிட்ச் குறித்து ஷமி கூறுகையில், “பிட்ச் குறித்து, நாங்கள் பசுமையான பிட்ச் கோரினோம். நாட்டின் சிறந்த வேகப்பந்து அணி நாங்கள், அதனால் நல்ல பந்துவீச்சுக்கு உகந்த மேற்பரப்பு கிடைக்க வேண்டும்” என்றார். இந்த போட்டியில் ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், இடது கை சுழல் பந்துவீச்சாளர் ஷாஹ்பாஸ் அகமது 6-34 மற்றும் 3-60 என்ற பந்துவீச்சால் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.